(Source: ECI/ABP News/ABP Majha)
கோடநாடு விவகாரம்: கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு; பூதாகரமாகும் சயன் வாக்குமூலம்!
“கோடநாடு வழக்கில் போதுமான ஆதாரம் கிடைத்து விட்டால் கொலையைத் தூண்டியவர்களை எப்போது கைது செய்வார்கள் என்று பலர் கேட்கின்றனர். சட்ட நடைமுறை எப்படி இருக்கும்?”
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019 ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17 ம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோடநாடு வழக்கில் என்னை குறி வைக்கிறார்கள் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வருகின்ற 27 ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், சயன் அளித்த வாக்குமூலம் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் அடுத்த கட்ட சட்ட நடைமுறைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஞானபாரதியிடம் கேட்டோம். அப்போது பேசிய அவர், “கோடநாடு வழக்கில் போதுமான ஆதாரம் கிடைத்து விட்டால் கொலையைத் தூண்டியவர்களை எப்போது கைது செய்வார்கள் என்று பலர் கேட்கின்றனர். விசாரணை முடிந்ததும் சிலரை புதிய சாட்சிகளாக சேர்த்து சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்களுடன் கூடுதல் குற்றப் பத்திரிக்கையை புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். தேவையெனில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்பு சாட்சிகளை வேறு நீதிபதி முன்பு அழைத்துச் சென்றூ வாக்குமூலம் கொடுக்க வைக்கும் வழக்கமும் உண்டு. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்களை கைது செய்யநீதிமன்றம் வாரண்ட் பிறப்பிக்கும். அதன் பின் தான் கைது நடக்கும்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மீண்டும் குற்றப்பத்திரிக்கை வழங்கப்படும். அதன்பின் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை அப்ரூவர்களாக ஏற்றுக் கொள்ள காவல் ஆய்வாளர் நீதிமன்றத்திற்கு மனு கொடுத்து அப்ரூவர்களாக ஏற்றுக் கொள்ள வைப்பார். பின்பு வழக்கு மீண்டும் முதலில் இருந்து தொடங்கும். அப்ரூவர்களும் சாட்சியம் அளிப்பார்கள். அவர்கள் சாட்சியம் நம்பும் படியாக இருந்ததால் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும். இது தான் சட்ட நடைமுறை.” என அவர் தெரிவித்தார்.