மீனை பட்டுவாடா செய்த மேற்குவங்கம் : தமிழகத்தை மிஞ்சிய அசாம் குடிகாரர்கள்
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர ஹில்சா மீன் பட்டுவாடா செய்ய அரசியல் கட்சிகள் முயற்சித்துள்ளனர். தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலே அசாம் மாநிலத்தில்தான் அதிகளவில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதே தேதியில் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த அசாம் மாநிலத்திற்கான வாக்குப்பதிவும் நிறைவு பெற்றது. எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் மேற்கு வங்கம் மாநிலத்தில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வரை மேற்கண்ட 5 மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், நகை, மதுபாட்டில்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் மதிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி, 5 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1001 கோடியே 43 லட்சம் மதிப்பிலான ரொக்கம், நகை, பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.446.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தில் வாக்காளர்களை கவர பல்வேறு விநோத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, மதுபாட்டில்கள் மற்றும் இலவசங்கள் வழங்க முயற்சி செய்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை கவர வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்க வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த இலவசங்களின் மதிப்பு ரூபாய் 118 கோடி ஆகும். பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த இலவசங்களில், ஹில்சா மீனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.88 கோடி மதிப்பிலான மொபைல் மற்றும் பேன்களும், 50 கோடி மதிப்பிலான ரொக்கமும், 30 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களும், 12 கோடி மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலு் இல்லாத வகையில் மேற்குவங்கத்தில் வாக்காளர்களுக்கு, அந்த மாநிலத்தில் பிரபலமான ஹில்சா மீனை வீட்டுக்கு வீடு இலவசமாக வழங்க முயற்சித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் பெரும்பாலானவை வங்கதேச எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டனவை ஆகும்.
தமிழகம் மற்றும் கேரளாவில் வாக்காளர்களை கவர்வதற்கு பெரும்பாலும் அரசியல் கட்சியினர் பணம் மற்றும் தங்கத்தையே கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் ரொக்கமாக மட்டுமே ரூ.236 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறக்கும் படையினரால் ரூ.176.46 கோடி மதிப்பிலான தங்கமும், கேரளாவில் ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் ரூ.27.42 கோடி மதிப்பிலான தங்கமும், மேற்கு வங்கத்தில் ரூ.12.07 கோடி மதிப்பிலான தங்கமும், அசாம் மாநிலத்தில் ரூ.3.69 கோடி மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களை காட்டிலும் அசாம் மாநிலத்தில்தான் வாக்காளர்களை கவர்வதற்கு மது அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் ரூ.41.97 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் ரூ.30 கோடி மதிப்பிலும், தமிழகத்தில் ரூ.5.27 கோடி மதிப்பிலும், கேரளாவில் ரூ.5.16 கோடி மதிப்பிலும், பாண்டிச்சேரியில் ரூ.70 லட்சம் மதிப்பிலும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது மொத்தமாக ரூ.225.77 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆண்டுகால இடைவெளியில் தற்போது ரூ.1001 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட தேர்தல் இன்னும் எஞ்சியுள்ளதால், இவற்றின் மதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.