TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay Election Campaign: சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது பரப்புரையை தீவிரப்படுத்த உள்ளார்.

TVK Vijay Election Campaign: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்த்ல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெருங்கும் தேர்தல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கமும், எதிர்க்கட்சித் தலைவர் மறுபக்கமும், ஆட்சியைப் பிடிக்க ஆர்வம் காட்டி வரும் சீமான் ஒரு பக்கமும் என தினசரி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழமை பாண்டிச்சேரியில் பரப்புரை செய்தார்.
தவெக-வினர் ஆங்காங்கே தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வந்தாலும் விஜய் கடந்த 3 நாட்களாக எங்கும் பரப்புரையில் ஈடுபடாமல் உள்ளார். காவல்துறையினர் அனுமதி மறுப்பு, போதிய நேரம் வழங்காமையே காரணம் என்று தவெக-வினர் குற்றம் சாட்டியிருந்தாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய் பரப்புரையை தீவிரப்படுத்தாமல் இருப்பது தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
பரப்புரை வேகத்தைக் கூட்டப்போகும் விஜய்:
இந்த சூழலில், இனி வரும் நாட்களில் சூறாவளி பரப்புரையை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். கொங்கு மண்டலம், தென் தமிழகம், வட தமிழகத்தில் இனி வரும் நாட்களில் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட விஜய் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும், முறையான முன் அனுமதியும் பெற அந்தந்த மாவட்ட தவெக-வினருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வார் என்று கருதப்படுகிறது. இதில் முதற்கட்டமாக நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் சாலை வலம் வர உள்ளார். பின்னர், தூத்துக்குடி - திருநெல்வேலி பைபாஸ் சாலையில் உள்ள கேடிசி நகரில் பேசுகிறார்.
பொதுமக்கள் பாதுகாப்பு:
இதன்பின்னர், விஜய் மிகவும் தீவிரமான பரப்புரையை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டை முழு வீச்சில் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு பொதுமக்களின் பாதுகாப்பு விவகாரத்தை முதன்மையாக கருதியே தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை திட்டமிடப்படுகிறது.
தனித்துப் போட்டி:
சாலைவலம் மற்றும் விஜய் பரப்புரையின்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் எந்தவித அசம்பாவிதத்தையும் சந்திக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே அவரது பரப்புரை பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு எதிராக தனித்து தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் களமிறங்கியுள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக தவெக-வினரும், அவரது ரசிகர்களும் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















