US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
US Iran War Latest News in Tamil: டிரம்ப் தனது டிரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ள கருத்தில், "ஒரு முழு நாகரிகமே இன்று இரவு அழியப்போகிறது.

US Iran War: ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியும், அது மீண்டும் திரும்ப வராது" என்று அவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் சமூக வலைதளப் பதிவு:
தனது 'டிரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ள கருத்தில், "ஒரு முழு நாகரிகமே இன்று இரவு அழியப்போகிறது. அது நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இப்போது நமக்கு முழுமையான ஆட்சி மாற்றம் கிடைத்துள்ளதால், புத்திசாலித்தனமான, தீவிரவாதமற்ற சிந்தனைகள் முன்னிலை பெறும். ஒருவேளை புரட்சிகரமான மாற்றங்கள் நடக்கலாம், யாருக்குத் தெரியும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.
கெடுவும் எச்சரிக்கையும்:
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு இன்று இரவு 8 மணி (இந்திய நேரப்படி நாளை காலை 5:30 மணி) கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து டிரம்ப் கூறுகையில், "47 ஆண்டுகால அநீதி, ஊழல் மற்றும் மரணங்கள் இன்றுடன் முடிவுக்கு வரும். இது உலகின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய கோரிக்கைகள்:
ஈரான் முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிபந்தனை. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இந்த பாதையை உடனடியாகத் திறக்காவிட்டால், ஈரானின் அனைத்து மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் "தரைமட்டமாக்கப்படும்" என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் அதிபரின் பதில்:
மறுபுறம், ஈரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தனது எக்ஸ் (X) தளத்தில், "ஈரானைப் பாதுகாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய 14 மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் முன்வந்துள்ளனர். அதில் நானும் ஒருவன். ஈரானுக்காக என் உயிரைக் கொடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று உறுதியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
முடிவுக்கு வருமா பதற்றம்? போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான தூதரகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த புதிய ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் காலக்கெடு முடிவுக்கு வரும் நிலையில், அமைதி ஏற்படுமா அல்லது போர் வெடிக்குமா என்ற அச்சத்தில் உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























