மேலும் அறிய
Advertisement
தடுப்பூசி வழங்கலில், சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து அழுத்தம் தரக்கூடாது - ராமதாஸ்
வருங்காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும், பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக போலியாக பதிவுகள் செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய போலி பதிவுகள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளபோதிலும், இதுவரை செய்யப்பட்டுள்ள போலி பதிவுகள் நீக்கப்படவேண்டியதும், போலி பதிவுகளின் எண்ணிக்கை கண்டறியப்பட வேண்டியதும் அவசியமாகும்.
கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெருமிதம் அளிக்கும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில், தடுப்பூசி போட்டதாக போலி பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பது பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. போலி பதிவுகள் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மூன்றாவது தரப்பின் குற்றச்சாட்டு அல்ல. மாறாக, இந்த முறைகேடுகளை அரசு பொது சுகாதாரத்துறையே கண்டறிந்து உறுதி செய்திருக்கிறது.
சென்னையில் பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்த மூத்த குடிமகன் ஒருவர் பயன்படுத்திய செல்பேசிக்கு அக்டோபர் மாதத்தில் இரு குருஞ்செய்திகள் வந்துள்ளன. அதில் அந்த செல்பேசியை பயன்படுத்திவரும் இருவருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணை பயன்படுத்தி மூவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக போலி பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ள பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பொது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதை எட்ட முடியாது என்பதால் தான் சுகாதாரப் பணியாளர்கள் போலி பதிவுகளை செய்தார்கள் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. போலி பதிவுகளுக்கான காரணங்களையும், பின்னணியையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும்; பல நேரங்களில் அந்த பாதிப்பை சரி செய்ய முடியாது. இதை உணராமல் சுகாதாரத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் செயல்படக் கூடாது.
உயிரிழந்தவர்களின் செல்பேசி எண்ணை பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அது குற்றம் தான் என்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. அதே நேரத்தில், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணை பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டிருந்தால், கடைசியாக அந்த எண்ணை பயன்படுத்தி யாருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதற்கான தடுப்பூசி சான்றிதழை மட்டும் தான் பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால், உண்மையாகவே அந்த செல்பேசி எண்ணை வைத்திருப்பவர் அவருக்கான தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்க முடியாது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளவர்களின் செல்பேசி எண்ணை பயன்படுத்தியும் போலி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் போட்டுக்கொண்டதாக பதிவு செய்யப்பட்டால், அவரால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது. இது மிகவும் கொடுமையானது. ஒருவர் செய்யாத தவறுக்காக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பை பறிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது தான். ஆனால், அதற்காக சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து களப் பணியாளர்களுக்கு தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவது சரியல்ல. அதுமட்டுமின்றி, இலக்கை எட்டாத சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அதனால் தான் சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய குறுக்கு வழிகளை பின்பற்றியதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி போடுவதற்கு சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு தவறோ, அதை விட தவறு அதைக் காரணம் காட்டி போலி பதிவுகள் செய்யப்பட்டது ஆகும். கொரோனா தடுப்பு தொடர்பான முக்கியமான விஷயத்தில் இது போன்ற குற்றங்களை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தெந்த செல்பேசி எண்களை பயன்படுத்தி போலி பதிவுகள் செய்யப்பட்டனவோ, அவை அனைத்தையும் நீக்கி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவான வெள்ளை அறிக்கையையும் தமிழக மருத்துவத்துறை வெளியிட வேண்டும். வருங்காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion