Cuddalore : அஜாக்கிரதையால் தொடரும் சோகம்: மாடு முட்டி விபத்து - சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
cuddalore Cow Collision: கடலூரில் மாடு முட்டியதில் ஏற்பட்ட விபத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
cuddalore Cow Collision: கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மாடு முட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதிதாசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
மாடு முட்டி விபத்தில் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு:
அப்போது, பின்னே வந்த அரசுப் பேருந்து மேலே ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திட்டக்குடி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதமாக மருத்துவ விடுப்பில் இருக்கும் இவர், இன்று காலை சித்தலூர் ரவுண்டானா அருகே விருத்தாச்சலம் வரும் வழியில் மாடு குறுக்கே வந்து முட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு:
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்தை சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர். சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், மாடு மோதியதால் ஏற்பட்ட விபத்தில், உதவி காவல் ஆய்வாளர் ஒருவரே உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை உள்ளிட்ட பொதுஇடங்களில் கால்நடைகள் நடமாடினால் கடும் எச்சரிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பல முறை எச்சரித்துள்ளது. ஆனாலும், சில உரிமயாளர்கள் அஜாக்கிரதையுடன் நடந்துகொள்வதால் இதுபோன்ற விபத்துகள் தொடர்கிறது. அண்மையில் சென்னையில் கூட ஒரு சிறுமி, மாடு முட்டி படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.