எழுத்தாளர் மு.முருகேஷூக்கு 2021-ஆம் ஆண்டின் பால சாகித்ய புரஸ்கார் விருது
மத்திய அரசின் பால புரஸ்கார் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷூக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. தற்போது, மத்திய அரசின் பால புரஸ்கார் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷூக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ”அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை” என்ற புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள மு.முருகேஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ண்தில் பிறந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் தமிழில் இள முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசியில் வசித்து வரும் இவர் கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.
சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். குழந்தைகளுக்கான நூல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மு.முருகேஷ் குழந்தைகளுக்காகவே இதுவரை 18 நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக மட்டும் பெரிய வயிறு குருவி, உயிர்க்குரல், ஹைக்கூ குழந்தைகள், கொஞ்சம் வேலை நிறைய சம்பளம், காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி, தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம் என்று பல நூல்களை குழந்தைகளுக்காகவே எழுதியுள்ளார்.
இவை தவிர, பூவின் நிழல், கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சம் புதுக்கவிதை, நீ முதல் நான் வரை, கடவுளோடு விளையாடும் குழந்தைகள் என்று 8 புதுக்கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். விரல் நுனியில் வானம், என் இனிய ஹைக்கூ, தோழமையுடன், ஹைக்கூ டைரி, தரை தொடாத காற்று, நிலா முத்தம், வரும் போக்கில் இருக்கிறது மழை என்று ஐக்கூ கவிதைகள் தொகுப்பு நூலையும் எழுதியுள்ளார்.
தற்போது பால புரஸ்கார் சாகித்ய விருது பெற்றுள்ள முருகேஷ், 2010ம் ஆண்டு எழுதிய குழந்தைகள் சிறுகதைகள் எனும் நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்தில் உள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஹைக்கூ கவிதைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ளங்கை அளவிற்கு ஒரு ஹைக்கூ புத்தகத்தை எழுதியும் சாதனை படைத்துள்ளார். இவரது இலக்கிய பணியைப் பாராட்டி ஏராளமான விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்