ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி: அன்புமணிக்கு ஆதரவாக அதிரடித் தீர்ப்பு! உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Anbumani Vs Ramadoss: "கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை"

தமிழக அரசியலில் முக்கியக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள், தற்போது கட்சியையே இரு பிரிவுகளாகப் பிளவுபடுத்தியுள்ளது. கட்சியின் அதிகாரம், பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தமக்கே சொந்தம் என அன்புமணி ராமதாஸ் தரப்பு உறுதியாகக் கூறி வருகிறது.
மேலும், அன்புமணி தரப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தங்களின் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்போ தற்போதைய சூழலில் கூட்டணி குறித்த எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
நீதிமன்றத்தில் தொடரும் சட்டப் போராட்டம்
கட்சியின் உரிமை மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக, நிறுவனர் ராமதாஸ் தரப்பு அன்புமணி ராமதாஸுக்கு எதிராகச் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிவில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவைச் சிட்டி சிவில் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்திருந்தது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி, இது குறித்து ராமதாஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கொண்டாட்டத்தில் அன்புமணி ஆதரவாளர்கள்
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைக்காலத் தடையை, அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து அன்புமணி ஆதரவாளர் அருள் ரத்தினம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும்போது, சட்டப்போராளிகள் மூலம் தாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி தர்மத்தின் அடையாளம் என்றும், சதிகாரர்களுக்குக் காலம் தரும் தண்டனை இதுவென்றும் விமர்சித்துள்ளார். மேலும், ராமதாஸ் தரப்பு தில்லியிலும் சென்னையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், அவை தோல்வியிலேயே முடிவதாகவும், பாமகவின் சட்ட ஆலோசகர் பாலுவின் சட்ட நுணுக்கங்களால் தங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















