ABP Nadu Exclusive | ''பழகிய அனுபவத்தால் உருவான கதை..'' சாகித்ய அகாடமி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் அம்பை!
'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' சிறுகதை குறித்து ஏபிபி நாட்டுக்கு பேசிய எழுத்தாளர் அம்பை சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
எழுத்தாளர் அம்பைக்கு (லக்ஷ்மி) சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதைக்காக அம்பைக்கு, சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த படைப்பாளர்களில் அம்பை குறிப்பிடத்தக்கவர். சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற பல படைப்புகளை அம்பை எழுதியுள்ளார். இந்நிலையில் சாகித்ய விருது அறிவிப்பு குறித்தும், 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' சிறுகதை குறித்தும் ஏபிபி நாட்டுக்கு பேசிய எழுத்தாளர் அம்பை சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ''சாகித்ய அகாடமி விருதை பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன். எனக்கு முன்னால் இருந்த மூத்த எழுத்தாளர்கள் ராமசாமி, ஞானக்கூத்தன் போன்ற பல பேருக்கும் கூட இது கிடைக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு வகை கூச்சம் இருக்கிறது. இப்போதும் பலர் புத்தகங்களை படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த விருது கிடைத்ததால் மேலும் இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அதிகரிப்பார்களா என்று எதுவும் சொல்வதற்கில்லை.
இப்போதும் மக்களிடையே வாசிப்பு திறன் உள்ளது. புத்தகத்தை எடுத்து படிக்கிறார்களா என்பதை உறுதியாய் சொல்ல முடியவில்லை. ஆனால் ஆடியோ கதைகள், ஆன்லைன், இணையவழியில் படிப்பது என புத்தகம் படிப்பது காலத்துக்கு ஏற்ப மாறிவிட்டது. எழுத்தாளர்களும் நேரடியாக கணினியில் டைப் செய்து எழுதுகிறார்கள். ஆனால் நான் எப்போதும் கைப்பட எழுதித்தான் கம்யூட்டரில் பதிவு செய்கிறேன். எந்தப்புத்தகத்தை எழுதும்போது விருதை நினைத்தோ, இத்தனை பேரை போய்ச்சேர வேண்டும் என நினைத்தோ எழுதுவதில்லை.
#BREAKING தமிழில் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருதுhttps://t.co/wupaoCQKa2 | #SahityaAkademiAward2021 | #SahityaAkademiAward #Lakshmi #Ambai #SivappuKazhuthudanOruPachaiParavai pic.twitter.com/Njtu8QpAlz
— ABP Nadu (@abpnadu) December 30, 2021
தோன்றுவதைத் தான் எழுதுகிறேன். கதை சிறப்பாக அமைய வேண்டும் என நினைத்துக்கொள்வேன். அவ்வளவுதான். விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட சிறுகதை செவி கேட்காத ஒரு பெண் குறித்த கதை. செவி கேட்காதர்களிடம் பழகிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. அந்த அனுபவத்தை வைத்தே அந்த கதை உருவானது'' என்றார்.
சாகித்திய அகாடமி:
சாகித்திய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருது ஆகும். இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்