Rolls Royce | சொகுசு கார் வரி விவகாரம்: நடிகர் விஜயின் மேல்முறையீட்டின் மீது நாளை விசாரணை..!
வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருக்கிறோம். என்னைப் பற்றித் தீர்ப்பில் பதிவுசெய்த விமர்சனங்களை நீக்கவேண்டும், அபராதத்தையும் ரத்துசெய்ய வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி அமர்வு விசாரித்த இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய டிவிஷன் அமர்வு விசாரிக்கிறது. டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்படும் மனுவுடன் நீதிமன்ற ஆணையின் நகலையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பின் நகல் உடனடியாக கிடைக்காவிட்டால், இணையதள பிரதியை நீதிமன்ற முன் அனுமதியைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
வழக்கு பின்னணியும் சர்ச்சையும்:
நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் என்ற சி.ஜோசப் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடவில்லை. இந்த வழக்கு ஆச்சரியமளிக்கிறது. நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும். வரி என்பது வருமானம் ஈட்டக் கூடியவர்கள் கட்டாயமாக நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு. அது நன்கொடை அல்ல. தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் நாட்டை ஆளும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். மனுதாரர் தனக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக உலகப் புகழ்பெற்ற சொகுசு காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். ஆனால் அதற்கு வரி செலுத்தவில்லை என்பது பெருமை தரக்கூடியதல்ல. யார், குறித்த நேரத்தில், முறையாக வரியை செலுத்துகிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோக்கள்.
மனுதாரர் தனது திரைப்படங்களில் லஞ்சத்துக்கு எதிராகவும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்துவிட்டு வரிஏய்ப்பில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. வரி ஏய்ப்பு தேசத் துரோகம். எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
அதுமட்டுமல்லாது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். அந்தத் தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தர்விட்டார்.
மேல் முறையீடு:
இந்நிலையில், விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். தனது மேல்முறையீட்டு மனுவில், வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால், என்னைப் பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்க வேண்டும். எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.