ஆடு திருடிய போது நாயிடம் சிக்கிய மர்ம கும்பல்... சுத்து போட்டு பிடித்த போலீஸ்.. 7 ஆடுகள் மீட்பு
நாய் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது 4 நபர்கள் ஆடுகளை இரண்டு இரு சக்கர வாகனங்களில் திருடி செல்வது தெரிய வந்தது.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே அதிகாலையில் ஆடு திருடிய 4 பேர் கைது. அவர்களிடமிருந்து 7 ஆடுகள் மீட்கப்பட்டது.
அதிகாலையில் ஆடு திருடும் கும்பல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு மகன் மணி (57) விவசாயியான இவர் தனது வீட்டில் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டின் அருகே ஆடுகளை கட்டி வைத்துள்ளார். அப்பொழுது அதிகாலை 3.30 மணி அளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு மணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத 4 நபர்கள் ஆடுகளை இரண்டு இரு சக்கர வாகனங்களில் திருடி செல்வது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து கூச்சலிட்ட மணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆடுகளை திருடிய நபர்களை பிடித்து திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆடு திருடி சிக்கிய 4 பேர்
இந்நிலையில் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், ரோஷனை கரியன் தெருவை சேர்ந்த முத்து மகன் ஜெகநாத் (18), செஞ்சி மெயின் ரோடு பசோத்தமன் கோவில் தெரு ராஜி மகன் அர்ஜுன் (19) ,ஜலீல் பாஷா மகன் ஜாசிம் பாஷா 19 என்பதும் இவர்கள் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகளை திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது.
7 ஆடுகள் மீட்பு: 4 கைது
இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 7 வெள்ளாடுகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த ரோஷனை போலீசார் திருட்டுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி 4 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.