JEE EXAM: ஜே.இ.இ. தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசு அளித்த விளக்கம் என்ன?
தமிழ்நாட்டில் 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு விளக்கம்:
ஜே.இ.இ. தேர்வு தொடர்பாக தமிழக பள்ளிக்கலவித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கை பற்றி விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய தேர்வு முகமை உறுதி அளித்துள்ளது. எனவே, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
View this post on Instagram
ஜே.இ.இ. தேர்வு:
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன், கொரோனா பரவல் காரணமாக தேர்வின்றி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்பட்டோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால், தற்போது 12ம் வகுப்பை முடித்துள்ள 2020-21ம் கல்வியாண்டை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேருவதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கும் தகுதி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டில் இரு முறை நடத்தப்படவுள்ளது. ஜனவரி 24-ஆம் தேதி தொடங்கும் முதலாவது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15-ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
அமைச்சர் விளக்கம்
இதுதொடர்பாக பேசியிருந்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் என புகார் எழுந்துள்ளது. "மாணவர்கள் தேர்வெழுத உரிய தீர்வு காணப்படும். இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவிட விலக்கு அளிக்ககோரி வலியுறுத்தி உள்ளோம் என அன்பில் மகேஷ் கூறியிருந்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும், ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம் என்பதில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.