Sivaji Krishnamurthy: டிஸ்மிஸ் ஆன திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி .. முதலமைச்சருக்கு நன்றி சொன்ன குஷ்பு..!
திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளராக உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் கடும் சர்ச்சையில் சிக்கினார்.
மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டுள்ளார்.
திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளராக உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் கடும் சர்ச்சையில் சிக்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக அறிவித்தது. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் அவர் மே மாதம் கட்சியில் திரும்ப சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, பெண்களை கேவலமாக பேசுபவர்கள் தங்களின் தாயின் வளர்ப்பை கேவலப்படுத்துகிறார்கள் என அர்த்தம். நான்கு ஆண்கள் சேர்ந்து கொண்டு பெண்கள் முன்னேறக்கூடாது, தங்களை எதிர்த்து பேசக்கூடாது என நினைக்கிறார்கள்.பெண்களை இழிவாக பேச யார் உரிமை கொடுத்தது. பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா? நான் இன்று பேசுவது எனக்காக பேசவில்லை ஒவ்வொரு பெண்ணுக்காகவும் பேசுகிறேன்.
இனிமேல் பெண்களை தரக்குறைவாக பேச எந்த ஆணுக்கும் தைரியம் வரக்கூடாது. மீறி பேசினால் திருப்பி அடிப்போம் என சரமாரியாக விமர்சித்தார். மேலும் கருணாநிதியின் திமுகவிற்கும் ஸ்டாலினின் திமுகவிற்கும் வித்தியாசம் உள்ளது எனவும் குஷ்பு கூறினார். அப்போது குஷ்பு கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் சிவாகி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டுள்ளார். அவரை நீக்கியதற்கு குஷ்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.