பிரதமர் மோடி மார்ச் 30-ந் தேதி புதுவை வருகை
பிரதமர் மோடி மார்ச் 30-ந் தேதி சட்டசபை தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வருகை உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் அதே தினத்தில், புதுச்சேரி மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர், பா.ம.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பிரச்சார கூட்டம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, அம்மாநில புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., பாஜக பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகின்றனர். வரும் 22-ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வரும் 24-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். வரும் 30-ம் தேதியன்று பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்.
ஏ.எப்.டி. திடலில் நடைபெற உள்ள பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். முக்கியத் தலைவர்கள் பலரும் பல்வேறு நாட்களில் புதுச்சேரிக்குப் பிரச்சாரத்துக்காக வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.