CV Shanmugam: பச்சோந்தி...துரோகி... சனி... ஆமை - ஓபிஎஸ்-யை பேசக்கூடாத வார்த்தையில் எல்லாம் பேசி கோபத்தை தீர்த்த சி.வி.சண்முகம்
எதிரியைவிட துரோகி தான் மிக மிக ஆபத்தானவர் என ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் விமர்சனம்.

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியை விட மோசமானவர் ஓபிஎஸ் என்று திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தது குறித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் இன்றைய பரபரப்பான செய்தி என்றால் அதிமுகவின் முக்கிய தலைவராகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததுதான். ஓபிஎஸ் திமுகவின் இணையப்போகிறார் என்று சில நாட்களாகவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தநிலையில், தற்போது அது இன்று உண்மையானது. அவர் திமுகவில் இணையமாட்டார் என்று ஒருபுறமும், அவருக்கு திமுகவை விட்டால் தற்போது வேறவாய்ப்பில்லை என்று மற்றொரு புறமும் பேசப்பட்டது. ஆனால், கடைசியில் திமுகவில் இணைந்து தீவிர அதிமுகவினருக்கும் அதிர்ச்சியையும், திமுகவினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததற்கு திமுகவினர் வரவேற்பையும், அதிமுகவினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஓபிஎஸ் மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
பசோந்தியைவிட மோசமானவர்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “அறிவாலய வாசலில் நிற்கும் அனைவரையும் கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் திமுக இருக்கிறது. அதிமுகவை பிடித்த சனி ஓபிஎஸ். காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றார்போல் அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர். பதவி ஆசையில் இரவோடு இரவாக கையெழுத்து பெற்று முதலமைச்சராக பதவியேற்றவர் ஓ.பன்னீர்செல்வம். பதவி கொடுத்தால் நண்பர்கள், பதவி கொடுக்காவிட்டால் துரோகிகள் என்பவர் தான் ஓபிஎஸ்” என்றார்.
பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியவர் ஓபிஎஸ்...https://t.co/wupaoCzH82 | #OPS #OPanneerselvam #AIADMK #CVShanmugam #tamilnadu #tnpolitics #tamilnews #ABPNADU pic.twitter.com/4SdaSroESO
— ABP Nadu (@abpnadu) February 27, 2026
எதிரியைவிட துரோகி ஆபத்தானவர்
மேலும், ஜெயலலிதாவையும் அவரை சுற்றி இருந்த அனைவரையும் ஏமாற்றிய பன்னீர்செல்வத்தை மன்னித்து அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம் என்ற அவர், எதிரியை விடவும் பக்கத்திலேயே இருந்து துரோகியாக மாறும் நண்பன் ஆயிரம் எதிரிகளுக்கு சமம் என்றும் எதிரியைவிட துரோகிதான் மிகமிக ஆபத்தானவர் என்றும் ஓபிஎஸ் மீது காட்டமாக விமர்சனம் வைத்துள்ளார். வீட்டிற்குள் புகுந்த ஆமை போன்றவர். அதிமுகவை அழிக்க முடியாது என தெரிந்த கொண்ட ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.























