காலையில் முதல்வருடன் சந்திப்பு.. பாஜக கூட்டணியில் இருந்து விலகல்.. ஓபிஎஸ் எங்கு செல்வாரோ?
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி விலகுவதாக அறிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக, திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் களப்பணி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசியலில் ஓபிஎஸ் மீண்டும் தனக்கென்று தனி வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார். ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ் பெரும் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு அரசியலில் இறங்கு முகமாகவே இருக்கிறது.
அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி ஓபிஎஸ்-யை சந்திக்காமல் சென்றது பேசுபொருளானது. அதிமுகவை முழுவதுமாக இபிஎஸ் கைப்பற்றிவிட்ட நிலையில் ஓபிஎஸ்க்கு மவுசு குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மோடியை சந்திக்க முயற்சித்தும் ஓபிஎஸ்க்கு எட்டாகனியாகவே இருந்தது. இந்நிலையில், இன்று காலை பாஜக கூட்டணியில் இருப்பதா இல்லையா என்பது குறித்து ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். தீவிர ஆலோசனைக்கு பிறகு பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தரப்பு விலகுவதாக முடிவெடுத்துள்ளோம். கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக என்ன செய்தது என்பதை நாடறியும். யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. இன்றைய சூழலில் எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை. 3ஆவது முக்கிய முடிவை இந்தக் கூட்டத்தில் எடுத்துள்ளோம் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவித்தார். அதன்பின்பு பேசிய ஓபிஎஸ், இன்று காலை நடைபயணத்தின் போது முதலமைச்சரை சந்தித்த பின்னர், பாஜக கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், காலையில் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவரும் சென்றுவிட்டார் அவ்வளவுதான் நடந்தது என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஓபிஎஸ் அணி கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என கூறியுள்ளது. அண்மையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், விஜய் கட்சியான தவெக - ஓபிஎஸ் இணைந்தால் மதுரையில் பலம் கூடும் என தெரிவித்திருந்தார். ஒரு வேளை அது நடந்தால் ஓபிஎஸ் மிளிர்வார் என நம்பப்படுகிறது. அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் தான். ஓபிஎஸ் எதிர்காலம் யார் கையில் இருக்கிறது என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது.





















