DMDK: 'இனி இருவரின் உருவமாக என்னுடைய அரசியலை பார்ப்பீர்கள்' - சீறும் விஜய பிரபாகரன்
விஜயகாந்த், பிரேமலதா அரசியலை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள். இனி இருவரின் உருவமாக விஜய பிரபாகரன் அரசியலை பார்ப்பீர்கள் என சீர்காழியில் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி இல்ல காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு தொண்டர்கள் பொதுமக்கள் இடையே சிறு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கேப்டன் நலமாக இருக்கிறார், மக்களை சந்திக்க கேப்டன் விரைவில் வருவார்.
தனி மனிதனாக மதுரையில் இருந்து புறப்பட்டு சினிமாவில் சாதித்து பின்னர் நடிகர் சங்கத்தை கடனை அடைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பெற்று ஆளுமை மிக்க தலைவராக கேப்டன் இருக்கிறார். அதிமுக, திமுக கொள்ளை அடித்து தேர்தல் நேரத்தில் செலவு செய்கிறார்கள். ஆனால், தேமுதிக தேர்தல் நேரத்தில் பணம் கொடுக்காமல் மக்களுக்கு ஐந்து ஆண்டுகளாக தனது சொந்த செலவு செய்கிறார்கள்” என்றார். மேலும், திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், நீட் தேர்வினால் உயிர் இழந்த அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வழி இல்லாமல் திமுக அரசு இருப்பதாகவும், இதே நீட் தேர்வில் பிரபஞ்சன் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியானது திமுக அரசு இதுவரை பாராட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடைய பிரச்சினைகளை புகார் பெட்டியில் தெரிவிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், எந்த மாவட்டத்திலும் புகார் பெட்டி வைக்கவில்லை என குற்றம் சாட்டினார். திமுக அரசின் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதாகவும், சமீபத்தில் கோவை டிஐஜி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது என குற்றம் சாட்டினார். கேப்டன், பிரேமலதா இருவரின் உருவமாகவே அரசியலில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், 90 கிட்ஸ் ஆக நான் உங்களிடம் கோரிக்கை வைப்பது 90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். உலக அளவில் இசையை மேம்படுத்த புதிய முயற்சியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதற்கான பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் உலக அளவில் இசையை கொண்டு சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். வெயில் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் நான் சொன்ன தண்ணீர் திமுக அரசின் டாஸ்மாக் தண்ணீர் இல்லை, இயற்கையான குடிநீர் என திமுகவை கிண்டல் செய்தார். முன்னதாக தேமுதிக விஜய பிரபாகரனுக்கு மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து செண்டை மேளம், சிலம்பம் வீரர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.