West Bengal Election: மேற்குவங்க தேர்தல் கலவரம்..17-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை - 5 மாவட்டங்களில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு
மேற்குவங்க மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக, 5 மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக, 5 மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் கலவரம்:
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ம் தேதி பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனாலும், பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டதோடு, துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்களும் நடைபெற்றன. இதில், ஒரு பாஜக பிரமுகர், சுயேச்சை வேட்பாளரின் பிரமுகர் மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 தொண்டர்கள் உயிரிழந்ததாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் வாக்குப்பதிவு தினத்தன்று நடந்த கலவரத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
மோதல் காரணமாக பல பகுதிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் வாகுப்பதிவு முறையாக நடைபெறவ்ல்லை எனவும், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த துணை ராணுவப்படையினர் பல இடங்களில் பணிக்கே அனுப்பப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு:
அதைதொடர்ந்து, புரிலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 697 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
பொதுமக்கள் கருத்து:
திகிபரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு பேசிய வாக்காளர் “கடந்த 8ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் இல்லை. 3 போலீசார் மட்டுமே இருந்தனர். இன்று துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் முறையாக வாக்களித்து விட்டு நிம்மதியாக வீடு செல்வோம்” என்றார். மற்றொரு வாக்காளர் பேசும்போது “இன்று தான் தேர்தல் நாளை போல உணர்கிறோம்” என குறிப்பிட்டார். கிராமம், பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அளவில் மொத்தம் 74 ஆயிரம் பதிவிகளுக்காக நடைபெறும், இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.