தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. மனு அளித்தது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கொளத்தூர் உள்பட 5 தொகுதிளில் தேர்தலை ரத்து செய்ய மனு அளித்து ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூவிடம் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
"கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் தி.மு.க. பணம் விநியோகித்துள்ளது. தி.மு.க. நவீன முறையில் ஊழல் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் மிக மிக கைதேர்ந்தவர்கள் என்பது சர்க்காரியா கமிஷன் மூலம் நமக்கு தெரியும்.
வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று 'கூகுள் பே' மூலமாக, வாக்காளர்களின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புகின்றனர். குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுக்களையும் அழைத்து ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் பணம் விநியோகித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த ஜனநாயக கேலிக்கூத்து அரங்கேறியிருக்கிறது. குறிப்பாக, இந்த 5 தொகுதிகளில் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். 2 ஜி ஊழலில் வந்த பணம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களிடம் உள்ளது. எனவே, அந்த பணத்தை வைத்து, செயற்கையான வெற்றியை பெற நினைக்கின்றனர்.
இந்த 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வெண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதி. அதனை நாங்கள் மதிக்கிறோம். தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்றில் தொலைக்காட்சியில் தி.மு.க. ஆதரவு விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது".
இவ்வாறு அவர் கூறினார்.