(Source: ECI/ABP News/ABP Majha)
Jayakumar On Sasikala : சசிகலா அதிமுகவிற்கு தொடர்பில்லாதவர், அவர் கருத்துக்கு பதில் தேவையா..? ஜெயக்குமார் பேட்டி!
சசிகலா அ.தி.மு.க.விற்கே தொடர்பில்லாதவர் என்பதால் அவரது கருத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். பின்னர்,
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “ சசிகலா கட்சியிலே இல்லாதவர். கட்சியிலே இல்லாத ஒரு நபர் கட்சியைப் பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சசிகலா கட்சிக்கே தொடர்பு இல்லாதவர் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தலைமை கழகத்தை மூடியது வருந்தத்தக்க நிகழ்வு என்று சசிகலா கூறியிருப்பது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் நிகழ்வா? தலைமை கழகத்தை மீட்டெடுப்பதற்கு நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்பார்கள். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடுமா..?
முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. தினகரன், சசிகலா அரங்கேற்றிய நாடகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு அளித்துள்ளார். அவர் ஒத்துழைப்பு அளித்துள்ளதால் அ.தி.மு.க.வை அளித்துவிட முடியுமா..? நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மேடையில் இடம் அளித்தோம். வைத்திலிங்கத்திற்கும் இடம் அளித்தோம். வரவில்லை. தற்போது நீக்கிவிட்டோம். இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.விற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லாத நபர். கட்சியின் பேனரில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் அளிக்காதது கட்சியின் விருப்பம். அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டாம்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒற்றைத்தலைமை எடப்பாடி பழனிசாமி என்றாகிவிட்டபோது, யாருமே விரும்பாத ஒரு விஷயத்தை எப்படி பேனரில் வைக்க முடியும். கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்று பட்டியலிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சி ஒழுங்குபாட்டை மீறி யார் செயல்பட்டாலும் ( ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் உள்பட) கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். “
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ராயப்பேட்டையில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர் என்பதும், அப்போது அங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்