எடப்பாடி பழனிசாமி ஏன் டெல்லி சென்றார்? - விளக்கிய ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் சட்டம் , ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலை. இதனைக் கூட மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சென்றிருக்கலாம் - ஜெயக்குமார்

இராமசாமி படையாச்சியார் 108 வது பிறந்த நாள்
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108 - வது பிறந்த நாளை முன்னிட்டு , சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள இராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;
இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்த தினம் இன்று அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் நிர்வாகிகள் அனைவரும் புகழ் மாலை செலுத்தினோம். உழைக்கும் வர்க்கத்திற்காகவே குரல் கொடுத்தவர் , மேலும் ராமசாமி படையாட்சி சுதந்திர போராட்டத்திற்கு குரல் கொடுத்து எண்ணற்ற தியாகங்களை செய்தவர். பேரறிஞர் அண்ணாவோடு கூட்டணி வைத்து சட்டமன்றத்தில் உழைக்கும் வர்க்கத்திற்காகவே குரல் கொடுத்தவர்.
எடப்பாடி பழனிசாமி டெல்லி பயனம் குறித்த கேள்விக்கு ;
தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளது. தமிழ்நாட்டில் தேனும் பாலுமா ஆறாக ஓடுகிறது.மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா என்ன ? மக்கள் இன்று சொல்ல முடியாத துன்பத்தில் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு தினம் தினம் மோசம். தினந்தோறும் படுகொலைகள் , கட்டப் பஞ்சாயத்து , காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை , சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலை தமிழ்நாட்டில் உள்ளது. எண்ணற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை அதனைக் கூட மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதற்காக சென்றிருக்கலாம் அல்லவா ?
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் அனைவரும் ஒன்றிணைவதால் நல்லது நடக்கட்டும் என சசிகலா கூறியதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ;
ஒன்றிணைப்பு குறித்து ஏற்கனவே பொதுச் செயலாளர் இதற்கான பதிலை தெரிவித்து விட்டார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் அந்த நன்றி கடனுக்காக நாங்கள் தற்பொழுது கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தெளிவாக பதில் அளித்து விட்டார்.
இளையராஜா பாராட்டு விழாவில் ஒரு குடும்பத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் அறிஞர்கள் பின் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்பநிதியை முன் வரிசையில் அமர வைக்கிறார்கள் என்றால் இது உபிக்களுக்கு (உடன் பிறப்புகளுக்கு) மகிழ்ச்சி, தமிழ் அறிஞர்களுக்கு பேரதிர்ச்சி எனக் கூறினார்.





















