EPS 69th Birthday: இபிஎஸ் பிறந்தநாள் விழா; முன்னாள் அமைச்சர்கள் நேரில் வாழ்த்து - சேலத்தில் குவியும் அதிமுகவினர்
முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்ட அதிமுக சார்பில் காலை 69 கிலோ எடை கொண்ட கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் அதிர்வலை ஏற்படுத்திய ஒரு ஆடியோவை, அமைச்சரவை மாற்றத்தால் செய்தியை மறைத்துவிடலாம் என்று தமிழக முதல்வர் முயற்சி எடுத்துள்ளார். ஒரு ஆடியோவால் அமைச்சரவை மாற்றம் மட்டும் போதாது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அமைச்சரவை மாற்றம் எத்தனை வந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, மக்கள் விரோத அரசாக இருப்பதால் அமைச்சரவை மாற்றத்தை மக்கள் விரும்பவில்லை, ஆட்சி மாற்றத்தை தான் விரும்புகிறார்கள் என்று கூறினர். இபிஎஸ், தினகரன் சந்திப்பு சந்தர்ப்பவாத சந்திப்பு எந்தவித தாக்கமும் ஏற்படாது. பூஜ்ஜியம் பூஜ்ஜியம் சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது, எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்ந்தாலும் பூஜ்ஜியமாக மட்டுமே இருக்கும், தவிர ராஜ்ஜியத்திற்கான வழி ஏற்படாது என்றார். அதிமுக விவகாரத்தில் பத்து முறை நீதிமன்றத்தில் முறையிட்டும் தோல்வி, தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு செய்து ஆதாரத்தின் அடிப்படையில் முடிவு செய்துள்ளது. மேலும் மூன்றாவது தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி தான் வழிநடத்த வேண்டும் என்று தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் தான் அதிமுகவை வழி நடத்துகின்ற தலைமை பொறுப்பில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். அரசியல் நாகரீகத்துடன் கையளவதற்கு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் பயிற்சி கொடுத்துள்ளனர். அரசியல் நாகரிகம் இருந்தால் மக்கள் முகம் சுளிக்கமாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் எப்பொழுதும் அவ்வாறு பேசமாட்டார்கள் என்றும் கூறினார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தால் தாக்கம் இருக்குமா என்ற கேள்விக்கு, அதிமுக என்பது ஒன்றாம் நம்பர், ஒன்றாம் நம்பருக்கு பின்னால் போடும் பூஜ்ஜியத்திற்கெல்லாம் மதிப்பு கிடையாது. எத்தனை பூஜ்ஜியங்களாக இருந்தாலும், பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக வரலாறு கிடையாது எனவும் விமர்சனம் செய்தார்.
இவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சி சரியில்லாத காரணத்தினால் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் ஊழல் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். அது உண்மை என்று அமைச்சரை நீக்கி உள்ளனர். அதேபோன்று 30,000 கோடி ஆடியோ பேசியது தவறு என்று அவரது துறை மாற்றப்பட்டுள்ளது. அப்போது ஆட்சியின் செயல்பாடு சரி இல்லை என்று தான் அர்த்தம் என்றார். ஓபிஎஸ், தினகரன் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லாம் பியூஸ் போனவர்கள். அது முடிந்து போனது. வேறு ஏதும் பண்ண முடியாது. அடுத்ததாக ஸ்டாலினை தான் அவர்கள் சந்திக்க வேண்டும். எங்களுடன் சண்டை போட்டவர்கள் இறுதியாக திமுகவில் சென்று இணைவார்கள் என்று கூறினார். திமுக ஊழல் பட்டியல் குறித்த கேள்விக்கு, அண்ணாமலை அனைத்தையும் அழகாக தெரிவித்து வருகிறார். ஊழல் செய்தவர்கள் பட்டியலை வெளியிடுவதில் தவறு ஒன்றும் இல்லை. அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு இந்த ஆட்சியை அகற்றுவதற்கான வேலையை பார்க்கட்டும் என்றார். யார் யார் தவறு செய்திருந்தாலும் அவரது ஊழல் பட்டியலை வெளியிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். எங்களது மடியில் எந்த கணமும் இல்லை. நாங்கள் பயப்பட அவசியமில்லை என்று கூறி இருக்கிறார். கர்நாடகா தேர்தலில் 40 சதவீதம் ஊழல் என்று கூறினார்கள். திமுக இரண்டு ஆண்டு சாதனையில் தமிழகத்தில் 100 சதவீதம் ஊழல் நடந்துள்ளதாக கூறினார்.