"மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது" - முத்தரசன்
இந்த அரசு ஆர்.எஸ்.எஸ்-னுடைய கரம் என்று இந்திய கம்னியூஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது.அதன் கொள்கைகளை, மனு தர்ம தத்துவத்தை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்த எல்லா முயற்சிகளை சட்டப்பூர்வமாக மேற்கொள்கிறது.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இன்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஐடியூசி மாநில தலைவர் சுப்பராயன் மற்றும் பொதுச் செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொழிற்சங்க கொடியேற்றி வைத்து நினைவு ஜோதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாநாட்டை தொடக்கி வைத்தனர். மாநாட்டில் முத்தரசன் பேசும்போது, “வாஜ்பாய் உள்பட மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த அனைவரும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினர். ஆனால் பிரதமர் மோடி எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனங்களை கூட உருவாக்கவில்லை ஏற்கனவே இருந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார். தனியாரின் நலன் பாதுகாக்கப்படுகிறது. அவர்களின் செல்வங்கள் மேலும் மேலும் பெருக வேண்டும் என்று விரும்புகிற மோசமான ஆட்சி மோடியின் ஆட்சி. தொழிலாளிகள், மாணவர்கள், விவசாயிகள், கல்வி உள்பட அனைவருக்கும் எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. தேசிய கல்வி கொள்கை என்கிற பெயரில் பட்டியல் இனத்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் கல்வி மறுக்கப்படும் வாய்ப்புள்ளது. டெல்லியில் விவாசாயிகள் போராடி 200 விவசாயிகளை பலிகொடுத்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற செய்தார்கள். அப்போது ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் ஒன்று கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணம் மீட்கப்ப்படும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 15 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கொடுத்த அனைத்து வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டனர். தற்போது தேர்தல் நெருங்குவதால் 71 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போகிறோம் என்று அரசாணை விழா நடத்தி ஆங்காங்கே வழங்கி கொண்டிருக்கின்றனர்.
மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாக செயல்படக்கூடிய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற அரசாக ஒன்றிய அரசு உள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியிருக்கிற அமைப்புகளுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த அமைப்புகளை சீர்குலைக்கின்றது. தேர்தல் ஆணையம் என்பது மோடி அமைத்தது அல்ல, எந்த பிரதமரும் அமைத்தது அல்ல. நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியிருக்கின்ற மகத்தான அமைப்பு அது. சுதந்திரமாக செயல்பட வேண்டும், ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும். யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க கூடாது. ஆனால் இன்றைய நிலைமை மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது. மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். மதம், ஜாதி, மொழி கலவரங்களை உருவாக்குகிறது, தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுப்படுத்துகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என மோடி சொல்கிறார். ஒரே மதம் எப்படி சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது. நம் நாடு பல மதங்களை கொண்ட நாடு. 4600க்கும் மேற்பட்ட ஜாதிகளை கொண்ட நாடு. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. மொழி, மத, சாதி வேறுபாடுகளுக்கு மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் என உலக நாடுகள் நம்மை போற்றுகிறது. அந்த போற்றுதலுக்கு எதிரான முறையில் இன்றைய அரசு செயல்படுகிறது. இந்த அரசு ஆர்.எஸ்.எஸ்-னுடைய கரம் என்று இந்திய கம்னியூஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. அதனுடைய கொள்கைகளை, மனு தர்ம தத்துவத்தை தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்த எல்லா முயற்சிகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். இது இந்த நாட்டை, மக்களை, தொழிலாளியை பிளவுபடுத்தும், தொழிலாளி என்ற பெயரில் தான் அனைவரும் ஒன்று சேர முடியும். மதத்தின் பெயரால் ஒன்று சேர முடியாது. அது தான் சாத்தியம். பொது சிவில் சட்டம் ஒரு போதும் ஏற்க இயலாது. தற்போது இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டும். 2024 தேர்தலில் மோடி அரசை தோற்கடிக்க முடியும் தோற்கடிக்க வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எம்பி சுப்பராயன், ”டிசம்பர் 16 முதல் 20ஆம் தேதி வரை கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசிய அளவிலான ஏ.ஐ.டி.யூ.சி மாநாடு நடைபெறுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக தொழிலாளர் விரோத போக்கினை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் நலனை மத்திய அரசு கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும், மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்ய இருக்கிறது” எனத் தெரிவித்தார்