Cm Stalin: கலங்கித் தவிக்கிறேன்..இனி யாரையும் இழக்க வேண்டாம்.. முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை
இந்தி திணிப்பு காரணமாக இனி எந்தவொரு உயிரையும் இழக்கக் கூடாது என, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.
இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம், இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம், ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது, போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்"
— DMK (@arivalayam) November 26, 2022
- கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
விவரம்: https://t.co/vE1yozy2O5 pic.twitter.com/CrIxRofpRY
மேட்டூரை சேர்ந்த 85 வயதான தங்கவேல், நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்த தங்கவேல், தாழையூர் தி.மு.க. அலுவலகம் அருகே இந்தி திணிப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, தான் எடுத்து வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும், தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.