சபாநாயகரை சித்திரகுப்தனாக்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் - பேரவையில் கலகலப்பு..!
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை, சித்திரகுப்தன் என்று குறிப்பிட்டு பேசினார். இதனால், பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.
தமிழக சட்டசபை கடந்த 13-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். வானதி சீனிவாசன் தனது பேச்சில் மானியக் கோரிக்கை தொடர்பாக இல்லாமல், பொது விவகாரம் குறித்து பேசினார். இதனால், உடனடியாக குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தாக்கல் செய்த மானியக் கோரிக்கை தொடர்பாக மட்டும் பேச வேண்டும். தங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசி வருகிறீர்கள். விரைவாக பேசி முடியுங்கள் என்று கூறினார்.
சபாநாயகர் அப்பாவுவிற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “சபாநாயகர் அப்பாவு சித்திரகுப்தனை போல செயல்படவேண்டும். அவரவர் பேசும் நேரத்தை அவரவர் கணக்கில் வைக்க வேண்டும். அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளித்த நேரத்தை என் கணக்கில் சேர்க்கக் கூடாது” என்றார்.
வானதி சீனிவாசனின் பதிலை கேட்டு அவையில் இருந்த அனைவரும் சட்டென்று சிரித்துவிட்டனர். அப்போது, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டென்று எழுந்து வானதி சீனிவாசனுக்கு பதிலளித்தார். அப்போது, அவர், “கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரமும், உறுப்பினர் பேசும் நேரத்தில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதனால், தனி ஒரு உறுப்பினருக்காக விதியை மாற்ற முடியாது.” என்றார்.
பின்னர் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், ஜனநாயகப்படி பேரவையை நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான் இந்த அவை நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். சட்டசபையில் பேரவைத் தொடங்கியதும் கேள்வி பதில் நேரம் என்று 1 மணி நேரம் அளிக்கப்படும். அந்த நேரத்தில் மட்டுமே உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியும். அதற்கு அடுத்து நடைபெறும் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அந்து துறைகள் மீது மட்டுமே கேள்விகள் எழுப்ப வேண்டும் என்பது அவையின் மரபு ஆகும்.
சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதன்முறையாக தனது உரையை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேசினார். பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பேசும் தங்களது முதல் உரையை கன்னி உரை என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய உரையை பேசி முடித்ததும், அதை அவரின் கன்னிப்பேச்சு என்று அவையில் குறிப்பிட்டனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன் இளம்வயது பெண்ணை குறிக்கும் வார்த்தைதான் கன்னி. அதனால், கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரீகமாக இருக்கும் என்றார்.