(Source: ECI/ABP News/ABP Majha)
’எங்கள் போராட்டத்தை பற்றி அரசுக்கு தெரியும்’ அதற்கு அவசியம் இருக்காது என நினைக்கிறேன்..! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு
மீண்டும் ஒரு இடஒதுக்கீடு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்று நம்புகிறோம். ஏனெனில் நமது போராட்டத்தை பற்றி இந்த அரசுக்கு நன்கு தெரியும் - அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம்: அடுத்த தலைமுறையை காப்பாற்ற பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமையும். இதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஏனெனில் அரசியல் களம் மாறியுள்ளது, மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் பாமக ஆட்சிக்கு வர வேண்டும், அவர்களிடம் புதிய செயல் திட்டங்கள் உள்ளது, புதிய யோசனை சொல்கிறார்கள் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான் மறுசீரமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. நம்மிடம் நவீன திட்டம், தொலைநோக்கு திட்டங்கள் உள்ளது. அடுத்த 50 ஆண்டு காலம், 100 ஆண்டு காலம் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக பல தொலைநோக்கு திட்டங்கள் உள்ளன. அதை செயல்படுத்த ஒரு அதிகாரம் வேண்டும். எனக்கு பதவி ஆசை இல்லை. 35 வயதில் என்னை அமைச்சராக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினார்கள். நான் உலக தலைவர்கள் முதல் எல்லா தலைவர்களையும் பார்த்து விட்டேன். ஆகவே பதவி ஆசை என்பது நிச்சயம் கிடையாது.
தற்போது எங்கு பார்த்தாலும் கலாச்சார சீரழிவுகள். பள்ளி மாணவர்கள் மதுபானம் குடிக்கிறார்கள். ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுகின்றனர். மாணவர்கள் போதையுடன் பள்ளிக்கு செல்கின்றனர், இதை பார்க்கும்போது இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அடுத்த தலைமுறையை காப்பாற்ற பாமக ஆட்சிக்கு வர வேண்டும்.எனவே நாம் அனைவரும் ஓயாமல் கடுமையாக உழைக்க வேண்டும். அரசியல் களம் நமக்காக காத்திருக்கிறது. 2026-ல் நாம் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. நந்தன் கால்வாய் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் 30 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம், இன்னும் வரவில்லை. தேர்தல் வந்தால் இந்த 2 கட்சிகளும் நந்தன் கால்வாய், நந்தன் கால்வாய் என்று சொல்லி பிரசாரம் செய்கிறார்கள்.
தேர்தல் வந்தால் மட்டும் நந்தன் கால்வாய் வரும், தேர்தல் முடிந்தால் நந்தன் கால்வாயும் போய்விடும். 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது சாதி பிரச்சினை கிடையாது, இது வளர்ச்சிக்கான பிரச்சினை. தனி இடஒதுக்கீடு வழங்கினால்தானே முன்னுக்கு வர முடியும். தமிழகத்தில் 2 சமுதாயம் பெரிய சமுதாயம், ஒன்று வன்னிய சமுதாயம், மற்றொன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம். இந்த சமுதாய மக்களும் 40 விழுக்காடு உள்ளனர்.
இந்த இரு சமுதாயமும் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். ஒரேயொரு காரணம்தான் அது புள்ளிவிவரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. இதுசம்பந்தமாக நாங்கள் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளோம். இந்த கல்வியாண்டிற்குள் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் சட்டம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றி 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம், அதற்கு அவரும் செய்வதாக கூறியிருக்கிறார், நிச்சயம் செய்வார் என்று நம்புகிறோம். மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்று நம்புகிறோம். ஏனெனில் நமது போராட்டத்தை பற்றி இந்த அரசுக்கு நன்கு தெரியும். 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு வரப்போவதில்லை என அவர் பேசினார்.
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:- ஆளுநரும், தமிழக அரசும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் ரயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் தமிழகத்துக்கு முன்னேற்றம் கிடைக்கும். தமிழகத்தில் மின்வெட்டு பொதுமக்களையும் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும் இதுகுறித்து முன்னரே கணித்து செயல்பட தமிழக அரசு தவறி விட்டது. தமிழகத்தில் மதுவிலக்கு 70 சதவீதம் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன.
ஆகவே மதுவிலக்கை முழுமையாக செயல்படுத்த செயல் திட்டம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறை பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். குறிப்பாக தற்போது பள்ளி மாணவர்கள் கூட மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசை மத்திய அரசு விலை குறைக்க சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனெனில் மத்திய அரசு தான் பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் தற்போது காவல் நிலைய மரணங்கள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.