ஊடகங்கள் மூடி மறைத்த உண்மை? நடந்தது என்ன? மயிலாடுதுறை எம்.எல்.ஏ. விளக்கம்
போக்குவரத்துக் காவலரை மயிலாடுதுறை எம்எல்ஏ தாக்கியதாக எழுந்த புகாருக்கு எம்எல்ஏ ராஜகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை; நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டு வருகின்றனர். மறுபுறம், பலரும் தீபாவளி ஷாப்பிங் செய்து வருவதால் நகரங்கள் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது.
சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற மயிலாடுதுறை எம்எல்ஏ
கடந்த அக்டோபர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், கூட்டம் முடிந்து மயிலாடுதுறைக்குப் புறப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து இடையூறாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கார் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ராஜகுமாருக்குச் சொந்தமானது.
எம்எல்ஏ - காவலர் மோதல்
காவல்துறையினர் காரை எடுக்க வலியுறுத்தியதாகவும், காரை எடுக்க எம்.எல்.ஏ. மறுத்து, போக்குவரத்துக் காவலருடன் எம்.எல்.ஏ. ராஜகுமார், அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைக் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், எம்.எல்.ஏ. ராஜகுமார் அங்குப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில் அடித்ததாகவும் தகவல் பரவின.
போக்குவரத்துக் காவலர் பிரபாகரனை எம்.எல்.ஏ. அடித்ததாகக் கூறப்படும் நிலையில், எம்.எல்.ஏ. ராஜகுமார், 'என் காரை எடுக்க முடியாது, இங்குதான் நிற்கும்' எனச் சாலையிலேயே விட்டுச் சென்றதாகவும்; அதனைத் தொடர்ந்து காரின் சக்கரங்களைப் பூட்டி போக்குவரத்துக் காவலர் பிரபாகரன் மீட்பு வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்துவந்த அண்ணா சாலை காவல்துறையினர், காவல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மக்கள் ஆதங்கம்
இந்தச் சூழலில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் காவலரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மயிலாடுதுறை சட்டத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் அவர் அப்படிப்பட்டவர் அல்ல, நாகரிகம் உடைய நபர், யாரிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்ற பண்பாளர் எனவும் அவருக்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் விளக்கம்
இதுகுறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கூறுகையில், "அங்கு நடந்தவற்றை அரசியல் ஆக்குகின்றனர். நான் காவலரைத் தாக்குமளவுக்குக் குணம் கொண்டவன் அல்ல, அது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். நான் அவரை அடித்தேன் என்றால் அதற்கான ஆதாரம் உள்ளதா? ஆளும் கட்சியின் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், இது முதல்வரின் துறை. அவர் என்ன முடிவெடுக்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என் மீது தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கட்டும்," என்றார்.






















