Vidya Rani in 2026 Election: நாதக வேட்பாளர்கள் 6 பேர் அறிவிப்பு; வீரப்பன் மகளை களமிறக்கும் சீமான்; எந்த தொகுதி தெரியுமா.?
2026 தேர்தல் நெருங்கும் நிலையில், 6 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதில், வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு வாய்ப்பளித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தலை நோக்கி தமிழகத்தின் முக்கிய கட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ள 6 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான். அதில், சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணியை மீண்டும் களமிறக்குகிறார்.
6 தொகுதி வேட்பாளர்களை அறிவித்த சீமான்
2026 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
ஏற்கனவே அந்த ரேஸில் பங்கெடுத்துள்ளா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுக்கூட்டங்களையும், பல்வேறு மாநாடுகளையும் நடத்தி வருகிறார். தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று, 6 தொகுதிகளின் வேட்பாளர்களை இப்போதே அறிவித்துள்ளார்.
மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, சேலம் மேற்கு, கெங்கவள்ளி, ஆத்தூர் ஆகிய தொகுதிகளில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வீரப்பன் மகள் வித்யா ராணியை மீண்டும் களமிறக்கும் சீமான்
அதன்படி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வித்யா ராணி கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் சார்பாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு, 4-ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். ஆனாலும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த அவருக்கு, கடந்த மார்ச் மாதம் தான் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த வித்யா ராணி, அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் பாஜகவிலிருந்து விலகிய அவர், கடந்த ஆண்டு தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
மற்ற வேட்பாளர்கள் யார் யார்.?
நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 2026 சட்டசபைத் தேர்தலில், சங்ககிரி தொகுதியில் நித்தியா அருண் போட்டியிடுவார் என்றும், வீரபாண்டி தொகுதியில் ராஜேஷ் குமார் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமாரும், கெங்கவிள்ளி தொகுதியில் அபிராமி போட்டியிடுவார் என்றும், ஆத்தூர் தொகுதியில் மோனிஷா சின்னதுரை போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2026 பிப்ரவரி மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டில், மீதமுள்ள வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார்.





















