தவெக கட்சிக்கு திரும்பும் இடமெல்லாம் தடை; சோதனை மேல் சோதனை - மயிலாடுதுறை பரபரப்பு....!
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட ஆர்ச் காவல்துறையினரின் உத்தரவை அடுத்து அகற்றப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா உலகின் முன்னனி நடிகரான விஜயின் அரசியல் வருகை இந்த செப்டம்பர் மாதம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும், அதற்காக வரும் செப்டம்பர் 23 -ம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர்.
தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர்
மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த சூழலில் விஜய் கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் சிக்கி வரும் நிலையில், கட்சியின் கொடி வெளியிட்ட போதே பல்வேறு சிக்கல்கள் வந்தது. கொடி தொடர்பாகவே தேர்தல் ஆணையத்திலும் தற்போது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினர்.
மாநாட்டிற்கு காவல்துறை 33 நிபந்தனைகள்
அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது. இதற்கு விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதில் அளித்தார். இதனையடுத்து விஜய்யின் தவெக முதல் அரசியல் மாநாட்டிற்கு காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. மாநாட்டின் மேடை, மாநாட்டு இடம், பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்களை கொடுக்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும், விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநாடு தள்ளிப் போக வாய்ப்பு
இதனை அடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி அதாவது 13 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் பத்து நாட்களே இடையில் இருக்கிறது. இதனால் மாநாடு தள்ளிப் போகலாம் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். குறிப்பாக முதன்முறையாக மிகப்பெரிய அளவிலான மாநாட்டை நடத்தப் போகிறோம், இதற்கு முன் மாணவர் சந்திப்பு போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் குறைபாடு இல்லாத வகையில் பார்த்துக் கொண்டோம். எனவே முதல் மாநாடு எவ்வித சிக்கலும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும். ஒரு சில நாட்கள் தாமதம் ஆனாலும் சரி பின்னர் மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபரில் மாநாடு
மேலும் காவல்துறை அளித்துள்ள பல்வேறு நெருக்கடிகளும் மாநாடு தள்ளிப் போக காரணம் என கூறப்படுகிறது. மாநாட்டுக்கு காவல் துறையினர் உள்ள கட்டுப்பாடுகளால் மாநாட்டு பணிகள் தாமதமானதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் இருப்பது போல அரசியலில் சீனியர்கள் இல்லாதது மாநாடு தள்ளிப்போனதற்கு ஒரு காரணம் என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இடைப்பட்ட காலத்தில் மாநாடு நடத்துவதை விட புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் மாநாடு நடத்தினால் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கும் எனவே போது மாநாட்டை அப்போது நடத்திக் கொள்ளலாம் என ஒரு குரூப் சொல்லி இருக்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு இடைவேளை தேவையில்லை, அதனால் அக்டோபரில் மாநாட்டை நடத்தலாம் என விஜய் நினைப்பதாகவும், இதற்கு ஜோதிடர்களும் பச்சை கொடி காட்டி இருப்பதால் மாநாடு நடக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் பிளக்ஸ் பேனர்கள், வாடகை வாகனங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்த ஒரு சில மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
திரும்பும் பக்கம் எல்லாம் தடை
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, கட்சி மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட உள்ளார். மயிலாடுதுறையில் இரண்டு இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக மாயூரநாதர் கோயில் மேல வீதியில் கட்சிக் கொடி ஏற்றும் விழாவுக்கு போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், வாய்மொழியாக வரவேற்பு ஆர்ச் அமைக்கவும் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாயூரநாதர் கோயில் மேலவீதியில் பொதுச் செயலாளரை வரவேற்க கட்சியினர் ஆர்ச் அமைத்துள்ளனர். மேலும், மயிலாடுதுறையில் வழிநெடுகிலும் கட்சிக் கொடியினை கட்டியுள்ளனர். இந்நிலையில், இன்று அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த ஆர்ச்சை அகற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். போலீசார் உத்தரவின் பேரில், கட்சி நிர்வாகிகள் அந்த ஆர்ச்சை அகற்றியுள்ளனர். மேலும் இந்த ஆர்ச் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டிருந்த நிலையில் இதனை தற்போது காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.