மயிலாடுதுறை மாவட்டத்தில் 4343 பேர் கைது - ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே....!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் பல்வேறு வழக்குகளில் 4267 வழக்குகள் பதியப்பட்டு 4,343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுபடி மது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை, மது மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுதல், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இதே போன்று சாலை விபத்துகளை குறைத்திடும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணைய வழி குற்றங்கள் மூலம் ஏற்படும் மோசடி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புனார்வு ஏற்படுத்துதல் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
மது விற்பனை
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 3,547 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 3,603 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 74,975 லிட்டர் மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கின் குற்றவாளிகள் மது விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 41 இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 12 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள்
அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 395 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 401 நபர்கள் கைது செய்யப்பட்டும், அவர்களிடம் இருந்து 949 கிலோ, 408 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையில் ஈடுபட்ட 302 கடைகளுக்கு உளணவு பாதுகாப்பு துறை முலம் சீல் வைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடமிருந்து 45,31,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 261 நபர்கள் கைது செய்யப்பட்டும், அவர்களிடம் இருந்து 33 கிலோ, 49 கிராம் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கின் எதிரிகள் கஞ்சா பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சா பொருட்களின் விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையங்களில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சட்ட விரோதமான மது, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் கடத்தல் தொடர்பான வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முலம் அரசுக்கு ஆதாயம் செய்யும் விதமாக 2024-ம் ஆண்டில் நடைபெற்ற பொது எலத்தின் மூலம் 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 59 இரண்டு சக்கர வாகனங்கள் சேர்த்து மொத்தம் 62 வாகனங்கள் பொது ஏலத்தின் மூலம் விடுவிக்கப்பட்டு மேற்படி ஏலத்தின் முலம் கிடைக்கப்பெற்ற 10,08,546 ரூபாய் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பாலியல் வழக்குகள்
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது 72 குற்ற வழக்குகள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 78 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.