விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய வியாபாரிகள் - இன்று கடையடைப்பு போராட்டம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட கோரி கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத்தினர் இரண்டு மணி நேரம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை கொள்ளிடத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி கடைமடை பகுதி
காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகளை இப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளை சார்ந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை நம்பி முழுமையாக இருந்து வருகிறது. மேலும் விவசாயம் முப்போம் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு போகம் செய்வதற்கு வழியில்லாமல் சூழல் நிலவி வருகிறது.
உப்பு நீரால் அவதி
இங்கு வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு நிலத்தடி நீர் முற்றிலும் உப்பாக மாறி உள்ளதால், குடிநீரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, கொள்ளிடம் ஆற்றில் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு உப்பு நீர் உப்பு வந்து குடிநீரே உப்பாக மாற்றி உள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் மழைக்காலங்களில் திறந்து விடப்படும் வெள்ள நீர் உபரிநீராக கொள்ளிடம் ஆற்றில் முழுமையாக வெளியற்றப்படுகிறது.
கடலில் வீணாக கலக்கும் பல லட்சம் டிஎம்சி தண்ணீர்
இந்த நீரானது சீர்காழி அருகே உள்ள பழையார் கடலில் சென்று பல லட்சம் டிஎம்சி தண்ணீர் வீணாக கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வீணாக மழை நீர் உபரிநீராக கடலில் கலந்து வருவதால் இந்த கடைமடை பகுதி சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்திற்கும் பயனில்லாமலும், குடிநீருக்கும் பயனில்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வீணாக கடலில் கலப்பதை தடுத்து கதவனை மற்றும் தடுப்பணை கட்ட வேண்டும் என இப்பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து, பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
கதவணை கட்டும் திட்டத்தை கைவிட்ட அரசு
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் - கடலூர் மாவட்டம் கருப்பூர் இடையே கதவணை கட்டுவதற்கு அரசு ஆய்வு செய்து, மதிப்பீடு செய்யப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பணியும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு தற்போது அத்திட்டத்தை கைவிடுவதாக அரசு கூறியுள்ளதாகவும், ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. மேலும் நிலத்தடி நீரும் முழுமையாக உப்பாக மாறிவிட்டதால் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த கொள்ளிடம் கடைவீதி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று இரண்டு மணி நேரம் கடையடைப்பு செய்து தமிழக அரசுக்கு தடுப்பணை மற்றும் கதவணை கொள்ளிடம் ஆற்றில் கட்டி தர கோரிக்கை விடுத்துள்ளார்.
கடையப்பு போராட்டம்
இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கடைவீதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம், ஆச்சாள்புரம், அளக்குடி, மகேந்திரப்பள்ளி, நாதல் படுகை, திட்டு படுகை, சந்தப்படுகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடைகள் மூடப்பட்டுள்ளதால் கொள்ளிடம் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது.