வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை மாவட்டம் - ஆட்சியரின் அதிரடி உத்தரவுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் இந்த பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலை
கூட்டத்தில், பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், அவசர காலங்களில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக விளக்கினார். ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் செல்லும் கால்வாய்களின் கரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக அடைப்பதற்குத் தேவையான மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க, போதுமான புல்டோசர்கள், ஜேசிபி இயந்திரங்கள், பவர்சா மற்றும் டிராக்டர்கள் போன்ற உபகரணங்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் அவசரகாலத் தேவைக்காக, ஜேசிபி மற்றும் டிராக்டர் உரிமையாளர்களின் தொலைபேசி எண்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் கேட்டுக் கொண்டார்.
சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள்
பருவமழை காலத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மலேரியா, காலரா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு, காய்ச்சிய குடிநீரைக் குடிக்குமாறு ஒலிபெருக்கிகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரக் குடும்ப நல துணை இயக்குநர், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மழைக்காலம் முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளைப் போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு
பருவமழைக் காலத்தில் எந்தவொரு இடர்பாடுகளையும் திறம்பட எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை, மற்றும் முக்கிய அரசுத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் கூறினார். இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது சீரிய முறையில் செயல்படுவதற்கு, அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் முன்தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முக்கிய அரசு அலுவலகங்களில் ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர், புல்டோசர், ஜேசிபி, மரம் அறுக்கும் கருவி போன்ற கனரக வாகனங்களை தயார் நிலையில் வைத்து, 24x7 நேரமும் பணியாற்றுவதற்குத் தேவையான ஊழியர்களை நியமித்து, அதன் விவரங்களை பேரிடர் மேலாண்மைப் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பு மற்றும் நிவாரணப் பணிகள்
மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். மேலும், தேவையான மருந்துகளைப் போதிய அளவில் இருப்பு வைத்திருக்கவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்ல தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறைக்கு அறிவுறுத்தினார்.
கடந்த கால அனுபவங்கள்
கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, புயல் அல்லது வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். மேலும், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இணைந்து ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, அதன் நடவடிக்கை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நலினா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.






















