வெளியே கசிந்த தகவல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை காவலர் - மயிலாடுதுறை தொடரும் பரபரப்பு..!
அலுவலக குறிப்புகளை மேலதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியில் பரப்பிய குற்றத்துக்காக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து சென்ற டிஎஸ்பி
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் சுந்தரேசன். இவரது நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக இரண்டு தினங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்றார். அதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுப்பிரிவு ஐஜி ஆகியோர் மீது விசாரணை தேவை என மயிலாடுதுறையில் டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி அளித்தார்.
விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல, அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் நேற்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டார் . அப்போது விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியானது.
பொதுவெளியில் கசிந்த போலீஸ் தகவல்
இந்நிலையில் அலுவலக குறிப்புகளை மேலதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியில் பரப்பிய குற்றத்துக்காக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சரவணனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி
இதனிடையே இன்று காலை டிஎஸ்பி சுந்தரேசன் மீண்டும் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது எனது உயிருக்கு ஆபத்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற காவலர்களை போன்று தவறான (தற்கொலை) முடிவுகளை எடுக்க மாட்டேன், எனது பிரச்சனையை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் , முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தனது குடும்பத்துடன் ரயில் மூலம் சென்னை புறப்பட்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார். மயிலாடுதுறை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























