இது அநியாயம் ! இயக்குநர் அனுமதி இல்லாமல் ஏ.ஐ மூலம் காட்சிகளை மாற்றி தனுஷ் படத்தை வெளியிடும் ஈரோஸ் நிறுவனம்
தனுஷ் நடித்து 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) திரைப்படம் ஏ.ஐ மூலம் திருத்தம் செய்யப்பட்ட காட்சிகளுடன் ரீரிலீஸ் ஆக இருக்கிறது

தனுஷின் அம்பிகாபதி ரீரிலீஸ்
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் , சோனம் கபூர் நடித்து இந்தியில் வெளியான படம் ராஞ்சனா. தமிழில் இப்படம் அம்பிகாபதி என டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தியில் தனுஷ் நடித்த முதல் படமே ரூ 100 கோடி வசூலித்து ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இந்தியைக் காட்டிலும் தமிழில் இப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படத்திற்கான ரசிகர்கள் பெரியளவில் அதிகத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அம்பிகாபதி படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது
ஏ.ஐ மூலம் திருத்தப்பட்ட க்ளைமேக்ஸ்
அம்பிகாபதி படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் குண்டடி பட்டு நாயகனாக தனுஷ் இறந்துவிடுவதே கடைசி காட்சி. இந்த காட்சி தமிழ் ரசிகர்களுக்கு இடையில் பெரியளவில் எடுபடாததால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தின் திருத்தம் ஒன்றை செய்துள்ளது . ஏ.ஐ மூலம் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மாற்றம் செய்து தனுஷ் உயிருடன் திரும்பி வருவதாக திருத்தம் செய்து தமிழில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ் ரசிகர்களிடம் இந்த க்ளைமேக்ஸ் வரவேற்பைப் பெறும் என்பது தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது
ஆனந்த் எல் ராய் எதிர்ப்பு
ஆனால் ஈரோஸ் என்டர்டெயின்மெட்ன் செய்திருக்கும் இந்த மாற்றத்திற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநரின் அனுமதி பெறாமல் நடிகர்களின் அனுமதி பெறாமல் இந்த மாற்றத்தை செய்வது கலைஞர்களின் தனியுரிமைக்கு எதிரானது என அவர் தனது நிலைப்பாட்டை கூறியுள்ளார். அம்பிகாபதி படத்தில் ஏ.ஐ மூலம் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 'ராஞ்சனா படத்தில் எந்த வித மாற்றமும் தேவையில் அதன் குறைபாடுகளுடன் ரசிகர்கள் அந்த படத்தை ஏற்றுக் கொண்டு மிகப்பெரிய ஹிட் படமாக்கினார்கள். தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு 12 ஆண்டுகளாக படத்தை கொண்டாடிய ரசிகர்களை ஏமாற்றுவதாகும் " என ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளார்
விடாப்பிடியாக இருக்கும் ஈரோஸ்
மறுபக்கம் ஈரோஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் முடிவில் தீர்மானமாக உள்ளது. " கிளாசிக் படங்களை புதிய ரசிகர்களை கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பாகம் தான் இந்த ரீரிலீஸ். பிராந்திய அளவில் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் இந்த மாற்றங்களை நாங்கள் செய்துள்ளோம்.இது அம்பிகாபதி படத்தின் ஒரு கற்பனை பிரதி மட்டுமே , மாற்று இல்லை. உலகளவில் பிரபல படங்களின் ஆண்டு நிறைவுகளில் இதே போல் ஸ்பெஷல் கட்ஸ் , திருத்தம் செய்யப்பட்ட பிரதிகளை ரிலீஸ் செய்வது வழக்கம் . இந்திய சட்டத்தின் படி ஒரு படத்தின் அதிகாரப்பூர்வ உரிமை அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடமே உள்ளது. அதனால் இயக்குநர் ஆனந்த் எல் ராயின் குற்றச்சாட்டுக்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம் " என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது





















