இதை கேட்காமல் வெளிநாடு போகாதீங்க....வெளிநாடு செல்லும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு: மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முக்கிய அறிவுரை!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புடனும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக் குறிப்பில், வெளிநாட்டுப் பயணம் குறித்த அத்தியாவசிய தகவல்கள், அரசு உதவிகள் மற்றும் எச்சரிக்கைகளையும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான வெளிநாட்டு பயணத்திற்கான வழிகள்
வெளிநாடு செல்வதற்கு முன், இளைஞர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்:
- அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள்: வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கும் முகவர்கள் அரசு அங்கீகாரம் பெற்றவர்களா? என்பதை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்படாத முகவர்கள் மூலம் செல்வது ஆபத்தை விளைவிக்கும்.
- விசா மற்றும் பணி ஒப்பந்தம்: வேலைக்கான விசா (Visa) மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (Proper Work Contract) ஆகியவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டு, உங்களுக்கான பணி என்ன, சம்பளம் எவ்வளவு, பணிபுரியும் நேரம் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிந்துகொண்ட பின்னரே பயணிக்க வேண்டும்.
- சந்தேகங்களுக்குத் தெளிவு: இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், poechennai1@mea.gov.in மற்றும் poechennai2@mea.mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகள் வாயிலாகவும் விளக்கங்களைப் பெற முடியும்.
- தூதரகத்தின் உண்மைத்தன்மை: தாங்கள் வேலைக்குச் செல்லவிருக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களைத் (Indian Embassy) தொடர்பு கொண்டு, வேலை வாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியே வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டும்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான அரசு திட்டங்கள்:
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தொழில் தொடங்க மானியத்துடன் கடன்: வெளிநாட்டில் 2 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்து, கொரோனா தொற்று காலத்தில் 01.01.2020 அல்லது அதற்குப் பிறகு தாயகம் திரும்பியவர்களுக்கு, தொழில் தொடங்க அரசின் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களின் இணையதளமான https://www.msmetamilnadu.tn.gov.inஅல்லது "தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர்" இணையதளம் மூலமாகச் சமர்ப்பிக்கலாம். மேலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை http://www.nrtamils.tn.gov.in/en/ என்ற இணையதளத்தையும் அணுகலாம்.
அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு:
வெளிநாடு செல்வோர் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் கட்டாயம் உறுப்பினராக இணைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
பதிவு: https://nrtamils.tn.gov.in என்ற வலைதளத்தில் ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம். இந்த அடையாள அட்டை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
காப்பீட்டு வசதி: அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, இறப்பு, விபத்து மற்றும் மருத்துவ செலவிற்காக காப்பீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளில் அவரவர் விருப்பப்படி 1) விபத்துக் காப்பீடு மற்றும் 2) நோய்களுக்கான காப்பீடு செய்து கொள்ளலாம்.
- கல்வி மற்றும் திருமண உதவித்தொகை: அயலகத் தமிழர் நல வாரிய அடையாள அட்டை பெற்ற வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் இறந்துவிட்டால், அவர்களின் மகள்/மகளுக்கு ரூ.20,000/- திருமண உதவித் தொகை வழங்கப்படும். மேலும், அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகையாக:
- பட்டயப் படிப்பு - ரூ.5000
- பட்டப்படிப்பு - ரூ.8000
- பட்டமேற்படிப்பு - ரூ.12000/-
- மேல்நிலை (11th, 12th, ITI) - ரூ.4000
- 10ஆம் வகுப்பு - ரூ.3000
ஆகிய தொகைகள் வழங்கப்படும்.
பாதுகாப்பான பயணத்திற்கான பயிற்சி மையங்கள்
வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் பாதுகாப்பாகவும், சட்டபடியாகவும், உரிய முறையில் செல்வதற்காக முன் புத்தாக்கப் பயிற்சி மையங்கள் (Pre-Departure Orientation Training - PDOT Centre) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், இராமநாதபுரம், பெரம்பலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இந்த மையங்கள் செயல்படுகின்றன. மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அருகிலுள்ள தஞ்சாவூர் மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அயலக வாழ் தமிழர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு மற்றும் உதவி எண்கள்:
காவல் பிரிவு: அயலக வாழ் தமிழர்களுக்கான Police wing http://www.nricell.tn.gov.in சென்னை காவல் கண்காணிப்பாளரைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு காணொளிகள்: வெளிநாட்டுப் பயணம் குறித்த விழிப்புணர்வு காணொளிகளான "அக்கரைபச்சை" மற்றும் "தெரிந்து செல்வோம்" ஆகியவற்றைப் பார்வையிடலாம் (youtube.com இணைப்புகள்).
அக்கரைபச்சை: https://www.youtube.com/watch?v=UbNcKFGqTuc,
தெரிந்து செல்வோம் : https://www.youtube.com/watch?v=pYYhlig8e10
விழிப்புணர்வு காணொளி: https://youtu.be/Cuzall1EzBU?si=76p1F5_OhVnnlvm
24 மணி நேர உதவி மையம்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சகத்தின் 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்:
* 18003093793
* 069009901
* 80600009900 (மிஸ்டு கால் எண்)
ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மக்கள் வெளிநாடு செல்லும் முன் மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.






















