Dravidian Politics: கேம்ப்ரிட்ஜில் திராவிட வரலாறு - சபரீசனின் பக்கா ஸ்கெட்ச், கருணாநிதி பெயரில் அசத்தலான திட்டம்
Dravidian Study Cambridge: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாறு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தொடங்கியுள்ளார்.

Dravidian Study Cambridge: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாறு குறித்த ஆய்வை ஊக்குவிக்க, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
கேம்ப்ரிட்ஜில் திராவிட வரலாறு:
திராவிட வரலாற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலினின் மகளும் கல்வியாளருமான செந்தாமரை ஸ்டாலின் மற்றும் அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசன் வேதமூர்த்தி ஆகியோர் சேர்ந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, உலக கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூகநீதி மரபுடன் இணைக்கும் வகையிலான வரலாற்று நடவடிக்கையாக, உலக புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக பொருளாதார மரபு மீதான மேம்பட்ட ஆராய்ச்சிக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி பெயரில் உதவித்தொகை:
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திராவிட இயக்கத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்த மறைந்த கருணாநிதியை கவுரவிக்கும் விதமாக, அவரது பெயரில் இந்த உதவித்தொகை (scholarship) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திராவிட வளர்ச்சி திட்டங்களின் மையமாக கருணாநிதி கொண்டிருந்த சமூகநீதி, கல்விக்கான அணுகல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை திட்டம் நினைவுகூறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பலன் என்ன?
இந்த திட்டத்தின் மூலம் நிரந்தர முனைவர் பட்ட மாணவர் பட்டத்தை பெறலாம். அதோடு, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நவீன தமிழ்நாட்டின் பாதையை ஆழமாக வடிவமைத்த சமத்துவ இயக்கமான திராவிட இயக்கத்திலிருந்து உருவான அரசியல் சிந்தனை, பொதுக் கொள்கை மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை மையமாகக் கொண்ட முதுகலை ஆராய்ச்சிக்கான தொடர்ச்சியான ஆதரவையும் இந்த உதவித்தொகை திட்டம் வழங்கும்.
தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதையைப் பற்றிய உலகளாவிய புரிதலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு, அசல் புலமையை ஊக்குவிக்கும். தமிழ்நாட்டில் சாதி, மாநில திறன், நலன்புரி மற்றும் அடிமட்ட அரசியல் அணிதிரட்டல் போன்ற கேள்விகளில் நிலையான ஈடுபாட்டை செயல்படுத்தும். கேம்பிரிட்ஜின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் இந்த ஸ்காலர்ஷிப் மூலம் பயன் பெறலாம்.
யாருக்கு உதவித்தொகை கிடைக்கும்?
இதுதொடர்பாக பேசிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி பேராசிரியர் டிம் ஹார்பர், “இந்த முக்கியமான படிப்புத் துறைகளின் எதிர்காலத்தை ஆதரிக்க, திரு. சபரீசன் மற்றும் திருமதி செந்தாமரையும் முடிவு செய்தது மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அடுத்த ஆண்டு முதல் எம். கருணாநிதி ஸ்காலரை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம். கருணாநிதி முனைவர் பட்ட உதவித்தொகை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தாமரை சபரீசன் பெருமிதம்:
கருணாநிதி பெயரிலான உதவித்தொகை திட்டம் தொடர்பாக சபரீசன் மற்றும் செந்தாமரை ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இந்த உதவித் தொகையானது, லட்கக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளித்த ஒரு இயக்கத்தின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும், அதன் கதை உலகளாவிய கல்வி மற்றும் கொள்கை உரையாடல்களின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதும் ஆகும். ஆராய்ச்சி மற்றும் உரையாடல் மூலம், திராவிட அனுபவம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என பெருமிதம் தெரிவித்துள்ளனர்.





















