வெளிநாட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்? ஆட்சியரின் முக்கிய அறிவுரை: பாதுகாப்பான பயணம் உறுதி செய்ய இதோ வழிகள்!
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடிச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறிவுரைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் குறுக்கு வழிகளைத் தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.
சட்டப்பூர்வமான வழிகளைப் பின்பற்றுங்கள்
வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நபர்கள் முதலில் இந்திய அரசின் eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். இது மிகவும் முக்கியமான முதல் படியாகும். சட்டப்பூர்வமான முகவர்கள் மூலம் செல்வது, போலி முகவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். மேலும், எந்த நிறுவனம் அல்லது முதலாளியின் கீழ் வேலை செய்ய இருக்கிறோம் என்ற தகவல்களை முன்னதாகவே உறுதி செய்துகொள்வது அவசியமாகும்.
வெளிநாடு புறப்படுவதற்கு முன், வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் சரியாகப் பெற்றிருக்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்த பின்னரே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இவை வெளிநாட்டில் தங்களது உரிமைகளைப் பாதுகாக்க உதவும்.
சட்டவிரோத வழிகளைத் தவிர்க்கவும்
பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்குச் செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்க வேண்டாம். அது மட்டுமல்லாமல், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கே இட்டுச் செல்லும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். இத்தகைய சட்டவிரோதப் பயணங்கள் தனிநபர்களின் எதிர்காலத்தையும், அவர்களது குடும்பத்தின் நலனையும் பெரிதும் பாதிக்கும்.
வெளிநாட்டு சட்டங்களை மதிப்பது அவசியம்
வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்துகொள்ள வேண்டியது முக்கியத்துவமானது பல நாடுகளில், வேலைக்குச் செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல்லும் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும். இந்த விதிமுறைகளை அறியாமல் பயணிப்பது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும். மேலும், ஒப்பந்த காலத்தில் வேலைக்குச் சென்ற நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விதிகளை மீறினால் சட்டச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.
உதவிக்கான தொடர்பு விவரங்கள்
வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினைத் தொடர்பு கொள்ளலாம்.
- இந்தியாவிலிருந்து அழைப்புக்கு: 1800 309 3793
- வெளிநாடுகளிலிருந்து (மிஸ்டு கால்): 0806900 9900 / 080 6900 9901
- மின்னஞ்சல்: nrtchennai@gmail.com nrtchennai@tn.gov.in
- இணையதளம்: https://nrtamils.tn.gov.in
இந்தத் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தங்களுக்குத் தேவையான தகவல்களையும், உதவிகளையும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.






















