இந்திய இராணுவத்தில் சேர இலவச வழிகாட்டி நிகழ்ச்சி... எங்கே? எப்போது தெரியுமா..?
இந்திய இராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு திட்ட தேர்வில் கலந்துகொள்வது குறித்த கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ளது.

இந்திய இராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு திட்டத்தின் கீழ், 2025-2026-ஆம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு தேர்வு விண்ணப்பம் தொடர்பான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிதாவது:
அக்னிவீர் திட்டம்
இந்திய இராணுவத்தின் அக்னிவீர் திட்டத்தின் கீழ், 2025-2026-ஆம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை சென்னை மண்டல ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆள்சேர்ப்பு அறிவிப்பில், அக்னிவீர் ஜெனரல் டூட்டி (பெண்கள் மட்டும்), சிப்பாய் ஃபார்மா, மற்றும் சோல்ஜர் டெக்னீசியன், நர்சிங் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலாவதியான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை... கால அவகாசத்தை நீட்டித்த ஆட்சியர்
பதவிகள் மற்றும் தகுதி விவரம்
- அக்னிவீர் ஜெனரல் டூட்டி (பெண்கள் மட்டும்): 17½ முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சிப்பாய் ஃபார்மா: 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சோல்ஜர் டெக்னீசியன் நர்சிங் உதவியாளர்: 17½ முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் https://joinindianarmy.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10.04.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் பிற விவரங்கள் குறித்தும் இத்தளத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
இந்நிலையில், இந்த ஆள் சேர்ப்பு தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஒரு கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி 09.04.2025, புதன்கிழமை நாளை தினமு காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய இராணுவத்தில் சேவை செய்யும் கனவை நிறைவேற்றலாம்.
மேலும் தகவல்களுக்கு
கூடுதல் தகவலுக்கு 04364-299790 அல்லது 9499055904 என்ற தொலைபேசி எண்ண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.






















