காலாவதியான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை... கால அவகாசத்தை நீட்டித்த ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் இலவச பேருந்து பயண அட்டையின் பயன்பாட்டு காலத்தை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் அவர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகைகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
காலாவதியான பேருந்து பயண அட்டை
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. 2024 - 2025 ஆம் நிதியாண்டில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க அரசு வழங்கிய பயண சலுகை கடந்த 31.03.2025 அன்று முடிவடைந்தது.
என்னடா பெரிய ராயல் என்ஃபீல்டு? - 15 செகண்ட்ஸ் தான்! அபேஸ் செய்த அல்டிமேட் திருடன்!
இலவச பயண அட்டையின் நோக்கம்
இந்நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பயண சலுகையின் கீழ், மாற்றுத்திறனாளிகள் கல்விக்காக பயணிக்க, தங்கள் வேலைக்குச் செல்லவும், அல்லது மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயன்படுத்த முடியும் என அரசு விதிமுறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சலுகை மாவட்டம் முழுவதும் பல மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்தச் சலுகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த சூழலில் தற்போது, இந்த இலவச பேருந்து பயண சலுகைக்கான பயண அட்டையின் தேதி முடிவைடைந்ததால், புதுப்பித்தல் நடைபெறும் வரை, ஏற்கனவே பழைய அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் பயணச் சலுகையை தொடர்ந்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு 30.06.2025 வரை மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது அட்டையை புதுப்பிக்க தேவையான நேரத்தைப் பெற முடியும்.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழக்கூடியவர்களாக உருவாக அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய பயண சலுகைகள் அவர்களின் இயல்பான வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் அமைகின்றன. மேலும், அரசு பேருந்துகளில் பயணிக்க உதவியளிப்பதன் மூலம், அவர்களின் நிதிச் சுமையையும் குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விபரம் அறிய
இந்த பயண சலுகையைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரில் சென்று அல்லது தொலைபேசி எண் 04364 – 212730 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் எனவும், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் ஒரு முக்கியமான பகுதியைக் கொண்டவர்கள். அவர்களின் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகிறது. பயண சலுகை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய அட்டைகள் வைத்திருப்பவர்கள் காலதாமதமின்றி பயணிக்கலாம். புதிய அட்டை பெற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.






















