மழை சேதங்களை தெரிவிக்க அவசர எண்கள் அறிவித்த தேனி மாவட்ட நிர்வாகம்..விபரம் இதோ
தேனி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 04546-1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் மற்றும் 9487771077 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதியில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆறு, அணைகளுக்கான நீர்வரத்தும் உயரத் தொடங்கி உள்ளன. தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழக, கேரள எல்லையில் கடந்த சிலநாட்களாக அதிகமான மழை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இந்த நிலையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்படிருந்த நிலையில்,
தேனி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகான கம்பம், போடி, தேவாரம், உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இனி வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்புவதற்கு வரத்து வாய்க்காலை தூர்வாருமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படின் அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும், முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை மற்றும் வைகை அணை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக் கூடாது. பொதுமக்கள் யாரும் வேறு காரணங்களுக்காக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை தேனி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 04546-1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் மற்றும் 9487771077 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்க்கண்ட தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1. தேனி வட்டாட்சியர் அலுவலகம் 04546-255133
2. பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் 04546-231215
3. ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் 04546-290561
4. போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகம் 04546-280124
5. உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் 04554-265226





















