வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஆட்சி போய் சேரவேண்டிய இடத்திற்கு சென்றுவிடும் - ஓபிஎஸ்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ஆட்சி செல்ல வேண்டிய இடத்திற்கு தானாகவே சென்று சேர்ந்துவிடும்
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் மீதான விலையை பெருமளவு குறைத்த போதும் தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படாததாக கூறியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்கவில்லை எனவும், அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்ததைக் கட்டுப்படுத்தவில்லை எனவும், தேர்தல் வாக்குறுதியாக அளித்த நீட் தேர்வு ரத்து, குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என கூறியும்,
பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக வின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் அடங்கிய கண்டன முழக்கங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அதனைத் திரும்பக் கூறினர்.
அப்போது பேசிய ஓபிஎஸ், கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செய்தது அதிமுக அரசு மட்டுமே. தற்போதும் செய்து வருகிறோம். திமுக அரசு நிவாரணப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு பிறகே முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 142 அடி நீர் தேக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் இழந்த உரிமைகளை போராடி மீட்கக்கூடிய இயக்கம் அதிமுக தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை அனைத்து மாநிலங்களும் குறைத்த போதும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காத ஒரே அரசு ஸ்டாலின் தலைமையிலான விடியாத அரசு மட்டுமே, முதியோர் உதவித்தொகை 1500 வழங்கப்படும் என்று கூறியவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாயையும் நிறுத்திவிட்டார்கள். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதையும் செய்யவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் தலா ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள்.அது என்னவாயிற்று, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்கள் அதுவும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் ரேஷனில் தரமான அரிசி வழங்கப்பட்டதாகவும், தற்போது திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வரும் அரிசி மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத வகையில் அரிசி தரமற்று உள்ளது. மக்கள் வீதியில் இறங்கி போராட கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விலைவாசி அனைத்தும் விஷம்போல் ஏறிவருகிறது.ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்கக் கூடிய அவலநிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் வெறும் கஞ்சி மட்டுமே குடிக்கக் கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காவல் தெய்வங்களாக திகழக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் அதையும் செய்யவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவ மாணவிகளை ஏமாற்றி விட்டார்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒதுக்கித் தந்தது அதிமுக அரசு.இதன் காரணமாக இன்றைக்கு ஆண்டுக்கு 545 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை தந்தது அதிமுக அரசே எனவும் கூறினார் மேலும்
இந்தியாவில் ஒரே முயற்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசின் அளப்பரிய சாதனை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ஆட்சி தானாகவே போய் சேரவேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்துவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.