தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்: கிணற்றில் குதித்த பட்டதாரி வாலிபர் - ஒட்டன்சத்திரம் அருகே சோகம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (24). இவரது தந்தை இவர்களைப் பிரிந்து மற்றொரு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதனால் தாயார் விஜயலட்சுமி, அருண்குமாரும் கருமன்கிணற்றில் வசித்து வந்தனர். கல்லூரி பட்டப் படிப்பை முடித்த அருண்குமார் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதன்பின் கொரோனா காலகட்டத்தில் பணியை விட்டு தங்களது சொந்த ஊருக்கு வந்து அவர்களது அம்மா மற்றும் பாட்டியுடன் சொந்த ஊரிலேயே தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஒரு ஸ்மார்ட் செல்போன் ஒன்றை வாங்கி தொடர்ந்து ஒரு ஆண்டுகளாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதையே முழு நேரமாகக் கொண்டுள்ளார். பல நேரங்களில் இவருக்கு ஆன்லைன் ரம்மி மூலம் பணம் வந்துள்ளது. இதை நம்பிய அருண்குமார் அவரது பெங்களூரில் பணியிலிருந்து இருந்த போது சம்பாதித்த பணத்தையும் அவர்களது அம்மா மற்றும் பாட்டி ஆகியோர் கூலித்தொழில் செய்து கொண்டு வரும் பணத்தையும் வங்கிக் கணக்கில் போட்டு அதனையும் எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது தாயாரும் பாட்டியும் கடந்த ஆறு மாத காலங்களாக இவ்வாறு செல்போனில் விளையாட வேண்டாம் என பலமுறை வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் அருண்குமார் தனியாக முட்புதர் இருக்கும் பகுதிக்கு சென்று செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதையே முழு நேரமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பெரும் பண நஷ்டம் ஏற்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத அருண்குமார் தனது தாய்க்கும் பாட்டிக்கும் தெரிந்தால் மிகவும் பிரச்சனை ஏற்படும், மனவேதனை அடைவார்கள் என நினைத்து அருண்குமார் கடந்த 22ஆம் தேதி தங்களது ஊர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இதை அறியாத அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அவரை பல பகுதிகளில் தேடி உள்ளனர் அவர் கிடைக்காத நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளிமந்தையும் காவல் நிலையத்தில் அவருடைய தாயார் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் கள்ளிமந்தயம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களும் பல பகுதிகளில் தேடியும் விசாரனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஊர் கிணற்றில் சடலமாக அருண்குமார் மிதந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்கள் உடனடியாக கள்ளிமந்தியம் காவல்துறையினருக்கும் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் கிணற்றில் மிதந்த அருண்குமார் பிரேதத்தை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிராமப் பகுதியில் கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரி வாலிபர் ஒரு ஏழை கூலி தொழிலாளியின் மகன் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெற்ற தாய்க்கும் அவரது பாட்டிக்கும் உறுதுணையாக இருந்த அருண்குமார் தற்போது இல்லை என்ற சூழ்நிலையில் அவர்களது தாயும் அவர்களது பாட்டியும் கதறும் நிலை மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் உள்ளது.
இதுபற்றிய அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “ஆன்லைன் சூதாட்டம் கிராம பகுதியில் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது . அதனால் உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் இது போன்ற பல இளைஞர்களின் உயிர்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்படும்” என்று கூறியுள்ளனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்