Mullaperiyar Dam: வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை.. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் கேரளாவிற்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம்,கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லையாறு, முல்லைக்கொடி, தாண்டிக்கொடி, ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. இந்த நிலையில் அணையின் நீர் மட்டம் 141 அடியை எட்டியது. மேலும் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக 142 அடியை எட்டவுள்ளது.
கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கான நீர்திறப்பு குறைக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.92 அடியை எட்டியது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கிவைக்க முடியும். இதனால் கேரள பகுதிகளுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.142 அடி எட்டியவுடன், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு நீர்வரத்திற்கேற்ப, உபரிநீர் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேற்றப்படும். இதனால் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, உப்புத்தரா உள்ளிட்ட முல்லைப்பெரியாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்திற்கேற்ப தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவும் அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.