Lok Sabha Elections 2024: “மோடி ஒன்றும் செய்யவில்லை; அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்” - சுப்ரமணியசாமி பரபரப்பு பேட்டி!
”மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. தோற்கடிக்க வேண்டும். உதயநிதி செங்கலை தூக்குவது பற்றி தெரியாது” என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் களம்
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. இதில், முதல்கட்டமாக திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது. பெரிய கட்சிகள் எதுவும் அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையிலும், இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் நான்கு முனைப் போட்டியால் தகிக்கிறது. இந்நிலையில் ”தி.மு.க., கருணாநிதி ஆட்சியை 2 முறை கவிழ்த்தவன் நான். தற்போது கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை” என மதுரையில் சுப்ரமணியசாமி பேட்டியளித்துளார்.
சுப்ரமணியசாமி பேட்டி
பா.ஜ.கவை சேர்ந்த சசிக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான சுப்ரமணியசாமி, சந்திரலேகா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுப்ரமணியசாமி பேசுகையில்..,”பா.ஜ.க., வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவதை பற்றி தெரியாது.
தமிழகத்தில் திமுக பா.ஜ.க., களம் மாறி உள்ளதா என கேட்ட கேள்விக்கு,
சிரித்தபடி, கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். பிரதமர் மோடி சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்சனை உள்ளது. என்ன செய்தார் மோடி. ஒன்றும் செய்யவில்லை.
பாஜகவில் ஆளுநர் கூட ராஜினாமா செய்து கொண்டு வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர் என்ற கேள்விக்கு,
அது என் தலைவலி இல்லை. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டு சென்றுவிடுவேன் என மோடி நினைப்பதால் என்னை தூரமாக வைத்துள்ளார்.
பாஜக கேட்டால் பிரச்சாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை.
திமுக கட்சியில் எத்தனை பைத்தியகாரர்கள் உள்ளனர். ராஜீவ்காந்தி என்ற நபர் பிராமணர்களை படுகொலை செய்வோம் என பேசியுள்ளார். நான் திமுக ஆட்சியை கவிழ்த்தவன். திமுக கருணாநிதி ஆட்சியை 2 முறை கவிழ்த்தவன் நான். தற்போது கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. தோற்கடிக்க வேண்டும். உதயநிதி செங்கலை தூக்குவது பற்றி தெரியாது” என்றார்.
- Lok Sabha Elections 2024: "ஜெயித்து விடுவோம் என சொல்வது ஈசி ஆனால்" நடிகை ராதிகா சரத்குமார்!