’கனிம வளம் கொள்ளை, புரளும் கரன்சி’ கண்டுக்கொள்ளுமா அரசு..?
கனிம வளங்களை சுரண்டி கொழுக்கிற கூட்டம் எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த முறை ஆட்சி அமைத்திருக்கும் திமுக கனிம வள கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திமுக ஆட்சி அமைந்தவுடன் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று அதிகாரிகள் இடம் மாற்றம். ஒவ்வொரு துறையிலும் தங்களுக்கு சாதமான அதிகாரிகளை நியமித்து, அதிமுக கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகிற அதிகாரிகள் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். இது போல தான் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள ஒரு மாவட்டத்திலும் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடம் மாற்றப்பட்டாலும், இலைக் கட்சியின் ‘தர்மயுத்தம்’ நியமித்த அதிகாரிகள் மற்றத் துறைகளில் அப்படியே தொடர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே ‘தர்மயுத்த’ மனிதரின் செல்வாக்கு செல்வாக்கு படிப்படியாக சரிந்து வரும் நிலையில், அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்களையும் ‘தூக்கி அடிக்க’ உதிக்கும் கட்சி நிர்வாகிகள் தயாராகிவருகின்றனர். ஆனால், இதே மாவட்டத்துல கனிம வளங்கள் கடந்த ஆட்சியில அதிக அளவில் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், கொள்ளையடித்த கனிம வளங்களின் மூலம் பெறப்பட்ட பணம் பத்தாது என்று, மீதமிருக்கக்கூடிய கனிமங்களையும் ’வழித்து அள்ள’ இப்போதும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. முன்பு இலை கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட சிலரால், இந்த மாவட்டத்தில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு ’கொழுப்பேறிப்போன’ நிலையில், இப்போது மீண்டும் இதே மாவட்டத்திற்கு வர துடித்துக்கொண்டிருக்கிறார்கள் கனிவளத்துறையை சேர்ந்த சில அதிகாரிகள். இதற்கு பல ‘லகரங்கள்’ பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதில் முக்கியமாக சுரண்டலுக்கு பெயர்போன கனிமவள அதிகாரி வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் உதிக்கும் கட்சி எம்.எல்.ஏ சிபாரிசோடு இந்த மாவட்டத்திற்கு ‘தேன்’ குடிக்க வர முயற்சித்துவருகிறார். இதனை கண்டு இலை கட்சி தரப்பே திகைத்துப்போயிருக்கிறதாம். பூமியில் இருந்து கிடைக்கும் கனிம வளங்களை சட்டத்திற்கு புறம்பாக, அதிக அளவில் எடுக்கும் அதிகாரிகள், அந்த சட்டப்பாதுகாப்போடேயே இந்த சுரண்டலை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பாதுகாக்கப்பட வேண்டிய வளங்கள் ரொம்பவே முக்கியமானது இந்த கனிம வளங்கள். இந்த கனிம வளங்கள் அழிந்து வந்தால் ஒவ்வொரு வளங்களும் படிப்படியாக அழிந்து முற்றிலும் மனித இனமே அழியக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படும் .இப்படி இருக்கும் ஒரு சூழலில் கனிமவள கொள்ளையில் ஈடுபடுவதற்கு பல லட்சங்கள், ஏன் பல கோடிகள் கூட செலவு செய்து கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு ஒரு கூட்டம் இந்த மாவட்டத்தில் மீண்டும் தயாராகி வருகிறது. இவ்வளவு செலவு செய்து கனிம வளங்களை கொள்ளையக்கும் நபர்களால், அதன் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் என்று நினைத்தாலே கண்ணைக் கட்டும் அளவு கள்ள மார்க்கெட்டில் இந்த கனிம வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் ஆளுங்கட்சி, கனிம வள கொள்ளையில் ஈடுபடுவோரையும் தடுத்து நிறுத்த வேண்டும்