மதுரையில் கலைஞர் நினைவு நூலக பணியில் இருந்த வடமாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
கலைஞர் நூலக பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடித்தளம் மற்றும் ஏழு மாடிகள் கொண்ட இந்த கட்டிட பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகளை துரிதபடுத்தியுள்ளனர். இந்நிலையில் மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் 5வது மாடி பகுதியில் கட்டிட பூச்சு பணியில் இருந்த மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த இக்பால்(25) என்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த வடமாநில இளைஞர் இக்பாலின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கலைஞர் நூலக பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்