நெல்லை ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; அறநிலையத்துறை நடத்த நீதிமன்றம் உத்தரவு
நெல்லை ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை சார்பிலேயே நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி வழக்கு.
நெல்லை ஸ்ரீ முத்துமாலை கோயில் கும்பாபிஷேக நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர்தான் நடத்த வேண்டும். எந்த தனி நபரின் தலையிடும் இருக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல நடிகர் மீசை ராஜேந்திரநாத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நெல்லை முக்கூடல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில் சில தனிநபர்கள் கோயிலில் எவ்விதமான பொறுப்புகளிலும் இல்லை. இவர்கள் மே 19-ம் தேதி ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதாக கூறி 4 பேரும் மக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர்.
தனிநபர் தலையீடு
கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னெடுக்காமல் இந்த நால்வரும் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை. ஆகவே நெல்லை மாவட்டம் முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தவும், அதில் முக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் பொன்னுராசு, மகேஸ்வரன், விஜய் சேகர் உள்ளிட்ட தனி நபர்களின் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
செயல் அலுவலரே கும்பாபிஷேக நிகழ்வை நடத்த வேண்டும்
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டு விட்டது. தற்போது இந்து சமய அறநிலைய துறையின் சார்பிலேயே கும்பாபிஷேக நிகழ்வு நடத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோயிலின் செயல் அலுவலரே கும்பாபிஷேக நிகழ்வை நடத்த வேண்டும். எந்த தனி நபரின் தலையிடும் இருக்கக்கூடாது" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thoothukudi: 3 மாதமா குடிநீர் குழாய் இருக்கு... தண்ணீர் வர நல்லியும் இருக்கு - ஆனா வெறும் காத்து தாங்க வருது
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Durai Vaiko : “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!