Thoothukudi: 3 மாதமா குடிநீர் குழாய் இருக்கு... தண்ணீர் வர நல்லியும் இருக்கு - ஆனா வெறும் காத்து தாங்க வருது
ஐந்து குக்கிராமங்களுக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு நல்லிகள் அமைக்கப்பட்டள்ளது. இது நாள் வரை அக்குழாயில் குடிநீர் வரவில்லை.
புதூர் அருகே குழாய் அமைத்து மூணு மாதங்களைக் கடந்த நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் இணைப்புகள் காட்சி பொருளாக உள்ளன. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் மிகவும் பின் தங்கிய பகுதியாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழைநீரை குடியிருப்பு பகுதிகளின் அருகில் உள்ள ஊரணிகளில் சேமித்து ஆண்டு முழுவதும் அதை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். விளாத்திகுளம், புதூர் வட்டாரம் மழை மறைவு மிகவும் பிரதேசமாகும். நிலத்தடி நீர்மட்டம் அகல பாதாளத்திற்கு சென்று கடல்நீர் மட்டம் உயர்ந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர் உப்பாக மாறி விட்டது.
இதனால் புதூர் வட்டார கிராமப்புறங்களில் குடிநீருக்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுகையோர கிராமங்களுக்கு வைப்பாற்றில் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆற்றிலிருந்து வெகு தூரமுள்ள கிராமங்களுக்கு 2004ம் ஆண்டு வல்லநாடு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கடலோர கிராமங்கள் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சுமார் 239 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதிலும் புதூர் கீழ் பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய வில்லை. இதனால் முந்தைய நிலையிலேயே திறந்த வெளியில் மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழைநீரை குட்டையில் தேக்கி வைத்து அதையே குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாரத பிரதமரின் ஜல் ஜீவன் மிஷன் எனப்படும் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அகர வரிசையில் ஊராட்சிகளை தேர்வு செய்து ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்குவதற்கு வீடுகள் நல்லிகள் அமைத்து அந்தந்த கிராமங்களில் தண்ணீர மூல ஆதாரத்தை கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதூர் வட்டாரம் கந்தசாமிபுரம் ஊராட்சியில் உள்ள ஜெகவீரபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, கந்தசாமிபுரம் புதுச் சின்னையாபுரம் ஆகிய ஐந்து குக்கிராமங்களுக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு நல்லிகள் அமைக்கப்பட்டள்ளது. அதே போல் சங்கரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் நல்லிகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இது நாள் வரை அக்குழாயில் குடிநீர் வரவில்லை. நல்லிகள் அமைத்ததோடு சரி தண்ணீருக்கான மூல ஆதாரத்தை ஏற்படுத்தாததால் நல்லிகள் காட்சிப் பொருளாக உள்ளது. சங்கரப்ப நாயக்கன்பட்டி கிராம மக்கள் அருகிலுள்ள குட்டையில் அமைக்கப்பட்டுள்ள அடிபம்பில் தண்ணீர் பிடித்து தலைச்சுமையாக புழக்கத்திற்கும், குடிநீருக்கும் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, “சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதித்து நல்லிகள் அமைக்கப்பட்டதே தவிர தண்ணீர் எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு குடிநீர் நல்லிகள் காட்சி பொருளாக காட்சியளிக்கின்றன. கடந்த காலங்களில் குடிக்கவும் புழக்கத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் தவித்த இப்பகுதி மக்கள் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திட்டமும் வந்தது, தண்ணீர் தான் வரவில்லை” எனக்கூறும் இவர், குடிநீருக்கான ஆதாரத்தை ஏற்படுத்தி குடிநீர் குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.