மேலும் அறிய
கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை மறுப்பு, பொதுக்கூட்ட விதிகள் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

மதுரைக் கிளை
இழப்பீட்டு தொகை அதிகமாக வழங்க வேண்டும், பொதுக் கூட்டங்கள் மாநாடு போன்றவை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் - என உத்தரவு.
தவெக தொடர்பான வழக்கு
த.வெ.க., தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் கரூர் வேலுச்சாமிபுரத்துக்கு அன்று இரவு 7 மணி அளவில் சென்றார். அவரை காண பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடியிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும், கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ், கதிரேசன், செந்தில் கண்ணன், தங்கம் பிரபாகர பாண்டியன், வி.எஸ்.மணி, எம்.எல். ரவி உள்ளிட்டோர் சார்பில் 7 மனு தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 7 மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.
தாமதமாக வந்தது தான் இந்த விபத்துக்கு காரணம்
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, கரூரில் விதிகளுக்கு உள்பட்டு பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் தேவையான அளவு போடப்பட்டு இருந்தது. அங்கு கூட்டம் அதிக அளவில் கூடி இருந்தது. ஆனால் த.வெ.க. தலைவர் விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது தான் இந்த விபத்துக்கு காரணம். எனவே தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த துயர சம்பவம் நடந்த உடன் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டன. கரூர் பாதிப்பு தீவிரம் அடைந்ததால் சம்பவத்தன்று இரவோடு இரவாக முதல்-அமைச்சர் அங்கு சென்றார். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விசாரணை முறையாக நடக்கிறது. கரூர் சம்பவத்தில் இறந்த நபர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் தமிழக அரசு இழப்பீடு அறிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தை தமிழக முறையாக அணுகியுள்ளது.
இவ்வாறு அரசு வக்கீல்கள் வாதாடினர்.
சி.பி.ஐ., விசாரணை
பின்னர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், கரூர் பிரசார கூட்டத்தில் பலர் இறப்பதற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததும் காரணம். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதே சரியானது. மேலும் கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வக்கீல்கள் வாதாடினர்.
மேலும் அரசு வக்கீல்கள் ஆஜராகி
இதே விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்த போது பொதுக்கூட்டங்கள் தொடர்பாக நிலையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் பெயரில் தமிழக அரசு அரசியல் கூட்டங்கள் தொடர்பான விதிமுறைகளை நிலையான வழிகாட்டுதல்கள் உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவரை அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று உறுதி அளித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு..,”தமிழக அரசு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான நிலையான விதிகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கும் வரை சாலைகளில் அரசியல் கட்சிகள் அதாவது ஆளுங்கட்சி உள்பட எந்த கட்சிக்கும் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு என உரிய இடங்களை தேர்வு செய்து அங்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கூட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது. பிற இடங்களில் அனுமதி வழங்கும்போது ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து தேவையான வசதிகளையும் செய்து உள்ளார்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சி.பி.ஐ.,விசாரணை தள்ளுபடி
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஏற்கனவே நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே கூடுதல் நிவாரணம் சம்பந்தமாக அறிவிக்கும்படி உத்தரவிடத்தேவையில்லை. அதேபோல இந்த சம்பவம் நடந்து சில நாட்களே ஆகின்றன. இதனால் இதுதொடர்பான விசாரணை பற்றி எந்த முடிவுக்கும் வர இயலாது. இதனால் கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏழு பொதுநல வழக்குகளும் முடிவுக்கு வந்தது
அதே போல இழப்பீட்டு தொகை அதிகமாக வழங்க வேண்டும், அதிகமாக வழங்க வேண்டும் எனக்கொருடியும் பொதுக் கூட்டங்கள் மாநாடு போன்றவை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு வகுக்க வேண்டும். அதுவரை த.வெ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநாடு பொதுக்கூட்டம் போன்றவை நடத்த அனுமதிக்க கூடாது. போன்ற கோரிக்கைகளுடன் தொடரப்ட்ட 4 பொது நல வழக்குகளையும் முடித்து வைத்து மெட்ராஸ் உயாநீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. இதன் படி பார்க்கையில் கரூர் சம்பவம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட ஏழு பொதுநல வழக்குகளும் முடிவுக்கு வந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















