TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக சார்பில் விஜய் தலைமையில் வரும் டிசம்பர் 18-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவெக கோரிய இடம் கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி அனுமதி மறுப்பு.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், விஜய்க்கு மிகப்பெரிய பக்கபலமாக அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், வரும் 18-ம் தேதி ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். இதனிடையே, மாநாடு நடத்த கேட்கப்பட்டுள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என கூறி, அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், சிக்கல் எழுந்துள்ளது.
ஆட்சியரிடம் செங்கோட்டையன் அளித்த மனு
ஈரோட்டில் மாநாடு நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில், வரும் 16ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் 7 ஏக்கர் அளவு பரப்பளவில் 75 ஆயிரம் பேர் கூடும் வகையில் மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை பரப்புரையில் விஜய் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது தவெக-வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் தனது அரசியல் பயணத்தை வேகப்படுத்த தொடங்கியுள்ள விஜய்க்கு, செங்கோட்டையனின் வருகை பலமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். கொங்கு மண்டலத்தில் தவெக-வின் முக்கிய முகமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார். தவெக-வில் இணைந்த பிறகு ஈரோடு திரும்பிய அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், அங்கு மாநாடு நடத்தி பெரும் கூட்டத்தை கூட்டினால், அதுவும் கட்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாக அமையும்.
மாநாட்டுக்கு எழுந்த சிக்கல்
இந்த சூழலில், தற்போது மாநாடு நடத்த கோரப்பட்ட இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த, விஜயமங்கலம் அருகே அனுமதி கோரி தவெக சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் 84 நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் என்பதால், மாநாட்டை ஏற்கனவே திட்டமிட்ட 16-ல் இருந்து 18-ம் தேதிக்கு தவெக மாற்றியது.
இதனிடையே, பொதுக்கூட்டம் நடத்த தவெக கோரும் இடம், விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என அக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு மாநாடு நடத்த அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி கோர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதோடு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு கோவில் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கோவில் இடத்தில் மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே போலீசார் விதித்த 84 நிபந்தனைகளால் தலைசுற்றலில் உள்ள தவெக-விற்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாநாடு நடைபெறுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது.





















